ஊட்டி, கொடைக்கானலுக்கான இ-பாஸ் நடைமுறையை செப்.30 வரை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு

ஊட்டி | கோப்புப் படம்
ஊட்டி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லாம் என்பது குறித்து கணக்கெடுப்பு நடந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இ-பாஸ் வழங்கும் நடைமுறையை வரும் செப்டம்பர் 30 வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கடந்த மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தனர்.

அப்போது இ-பாஸ் வழங்கும் முன்பாக எந்த வாகனத்தில் வருகின்றனர், எத்தனை பேர் வருகின்றனர் மற்றும் எத்தனை நாட்கள் தங்கப் போகின்றனர் என்ற விவரங்களையும் பெற வேண்டும் என திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாகவும், எனவே இ-பாஸ் நடைமுறையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என்றார்.

அதையேற்ற நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறையை வரும் செப்.30 வரை நீட்டித்து உத்தரவி்ட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in