

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் அறிவிக்கப்படாத மின் தடையை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி மெழுகுவர்த்தியை ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமேசுவரத்தில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்தடையை சரி செய்ய வேண்டும், 2வது வார்டில் குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும். போதிய தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ராமேசுவரம் இரண்டாவது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டாவது வார்டை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் மின்வாரிய துறையைக் கண்டித்து கோஷம் எழுப்பினார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் உதவி மின் பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.