

கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 23 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். அவர்களில் 2 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்திலும், ஒருவர் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திலும், 20 பேர் புதுச்சேரியிலும் தேர்வு எழுத உள்ளனர்.
‘வெளி மாநில மையங்களான எர்ணாகுளம் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் உள்ள மையங்களில் தேர்வெழுத சென்றுள்ள மாணவ, மாணவியர் தங்களது சொந்த முயற்சியில் சென்றிருப்பதாகவும், அவர்கள் ஹால் டிக்கெட்டை காண்பித்து அரசு உதவித் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல் கடலூரைச் சேர்ந்தவர்கள் 20 கி.மீ. தொலைவில் உள்ள பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் தேர்வு எழுதவுள்ளனர். அவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படும்’ என்று கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பயணச் செலவாக ரூ.1,500 (தங்குமிடம், உணவு தேவைக்காக) மற்றும் இருவழி போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருக்கிறார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மணவெளி தொகுதியில் இருந்து நீட் தேர்வு எழுத தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் 14 பேருக்கு, அத்தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவும், அரசு கொறடாவுமான அனந்தராமன், தனது சொந்தப் பணத்தில் இருந்து தலா ரூ.2,500 வழங்கினார்.
அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தி தேர்வெழுத வழியனுப்பி வைத்தார்.