Last Updated : 28 Jun, 2024 10:10 AM

 

Published : 28 Jun 2024 10:10 AM
Last Updated : 28 Jun 2024 10:10 AM

‘செயல்படும்’ திமுக, கலக்கத்தில் பாமக, அதிமுக ஆதரவு நாடும் நாதக - விக்கிரவாண்டி நிலவரம் என்ன?

தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, பாமக மற்றும் நாதக

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிக்குழுவில் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் தொகுதிக்கான ஒன்றியப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று மகளிர் உரிமைத் தொகை, கல்விக் கடன், முதியோர் ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்களித்து, அதில் உடனே நிறைவேற்றக்கூடியவற்றை நிறைவேற்றி தருகின்றனர். திமுக முதற்கட்ட பிரச்சாரத்தை தொகுதி முழுவதும் முடித்துவிட்டது என்றே சொல்லலாம்.

இரண்டாம் கட்டமாக சட்டப்பேரவை கூட்டம் முடிந்தபின் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தங்கி வீடுவீடாக சென்று வாக்காளர்களை சந்திக்க உள்ளனர்.

பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, அதில் சிவகுமார் எம்.எல்.ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல நாம் தமிழர் கட்சி சார்பில் இயக்குனர் மு.களஞ்சியம் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களின் பல ஆண்டு கோரிக்கைகளாக இருக்கும் உள் ஒதுக்கீடு பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 10.5 சதவீத உள் ஒதுக்கீடு கிடைத்தால் தான் வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் உரிய இடம் கிடைக்கும் என்ற முழக்கத்தை பாமக ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் திண்ணை பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

கூடுதலாக மற்ற சமூகத்தினரின் வாக்குகளை பெறும் பொழுது வெற்றியை எட்டி விடலாம். அதேபோன்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் உரிய இடஒதுக்கீடு கிடைக்கும் என்ற பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வருகின்றனர். இதன் மூலமாக இடஒதுக்கீடு சரியாக கிடைக்கவில்லை என நினைக்கும் பிற சமூகத்தின் வாக்குகளை பெற முடியும் என்ற கணக்கும் உள்ளது.

ஆகையால் இதில் 25 முதல் 30 சதவீத வாக்குகளை பெற்றாலே ஏறத்தாழ 60 ஆயிரம் வாக்குகள் வரையில் பெற்று விட முடியும் என்கின்றனர் அக்கட்சியினர். ராதாபுரத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, கருணாநிதி இருந்திருந்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திருக்கும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கும் என்று தற்போதுள்ள திமுக அரசு மீதான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதன் மூலம் திமுகவில் இருக்கும் வன்னியர்களும் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு பிரச்சாரமாக இது பார்க்கப்படுகிறது. மேலும், திமுகவை எதிரியாக பார்க்கும் அதிமுக, தேமுதிகவினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், பாமக வேட்பாளரை பொது வேட்பாளராக பார்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி, மரக்காணம் கள்ளச் சாராய மரணங்களை சொல்லி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பிரச்சாரம் செய்து வருகின்றனர் அக்கட்சியினர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் திமுகவையும், பாஜகவையும் விமர்சித்து பிரச்சாரம் செய்யும் அதே வேளையில் அதிமுக, தேமுதிக வாக்குகளை பெற தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். தொகுதியில் மும்முனை போட்டி நிலவி வரும் சூழலில் அதிமுக ஆதரவை சீமான் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய தேர்தல் முடிவுகள்: இந்த தொகுதியில் 2016-ம் ஆண்டு திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளும் போட்டியிட்டது. அந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ராதாமணி 63,757 வாக்குகளையும், அதற்கடுத்து அதிமுக 56,845 வாக்குகளையும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி 41,428 பெற்றிருந்தார். தனித்து போட்டியிட்ட பாமக மும்முனை போட்டி நிலவிய போது 23 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

இதன்பிறகு 2019 நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக திமுக இடையே போட்டி நிலவியது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 1,13,776 வாக்குகளையும், திமுக வேட்பாளர் புகழேந்தி 68,842 வாக்குகளையும் பெற்றனர்.
அதேபோன்று 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் புகழேந்தி 93,730 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் வேட்பாளர் 84,157 வாக்குகளையும் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷீபா ஆஷ்மி 8,216 வாக்குகளையும் பெற்றார்.

இப்படிப்பட்ட சூழலில் தான் பாமக தனது வாக்குகளுடன் அதிமுக, தேமுதிகவின் வாக்குகளும் கிடைத்தால் திமுகவிடமிருந்து வெற்றியை தட்டி பறித்து விடலாம் என்ற கணக்கில் தேர்தல் பணி ஆற்றி வருகிறது.

இப்போதைய நிலவரப்படி திமுக குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் நிலையிலும், பாமக இரண்டாவது இடத்தில் 60 ஆயிரம் வாக்குகளை பெறும் நிலையிலும், நாம் தமிழர் கட்சி 15 ஆயிரம் வாக்குகள் பெறும் நிலையில் உள்ளது.

அதிமுக, தேமுதிக வாக்குகள் எந்தப் பக்கம் சாயும் என்பதை பொறுத்தும், சுயேட்சை சின்னமான பானை சின்னம் எவ்வளவு வாக்குகள் பெறும் என்பதை பொறுத்து இந்த கணிப்பு மாற வாய்ப்புள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு மொத்தம் 1,15,749 ஆண் வாக்காளர்களும், 1,18,393 பெண்; வாக்காளர்களும் 31 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,34, 173 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x