

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.2.5 கோடியில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் அமைப்பது தொடர்பாக ஆகஸ்ட் 2ம் தேதி (சனிக்கிழமை), அமைப்புப் பணி ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தை திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கூடத்தில் பண்டைத் தமிழரின் வாழ்வியல் கூறுகளான தொழில், வேளாண்மை, கடல் வணிகம், ஆட்சி நிர்வாகம், கலை, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை, எடுத்துக் கூறும் வகையில் சுடுமண் சிற்பம், செங்கல், சுதை சிற்பம், மரம், கல் மற்றும் உலோகம் ஆகியவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
காட்சிக் கூடம் அமைப்புப் பணி ஆய்வுக் கூட்டம், வரும் 2ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு, தரமணி மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகத்திலுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், பல்வேறு சங்க இலக்கியம் மற்றும் பழந்தமிழர் பண்பாட்டியல் ஆய்வறிஞர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.