Published : 28 Jun 2024 05:07 AM
Last Updated : 28 Jun 2024 05:07 AM

ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பன்னாட்டு விமான நிலையம்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். திருச்சியில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம், அறிவுசார் மையம் கருணாநிதி பெயரால் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தொழில் தொடங்குவதற்காக உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சி அடைவதுடன், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

கடந்த 2022-ம் ஆண்டுக்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக முன்னேறியுள்ளது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக உள்ளது. புத்தொழில் வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில், 2020-ல் கடைசியில் இருந்த தமிழகம், தற்போது சிறந்த செயற்பாட்டாளர் அந்தஸ்துடன் முதலிடம் பெற்று உள்ளது.

நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை விரைவில் அடைய, தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் உயர்ந்து வருகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் தொழில்களை பரவலாக உருவாக்கி வருகிறோம். இதில் மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தி துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது. வேகமாக வளர்ந்துவரும் ஓசூரை, தமிழகத்தின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்க, அங்கு நவீன உள்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில், பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆண்டுக்கு 3 கோடி பயணிகள்: அந்த வகையில், ஓசூருக்கான ஒரு புதிய பெருந்திட்டம் (Master Plan) தயாரிக்கப்பட்டு, நிறைவடையும் நிலையில் உள்ளது. ஓசூர் மட்டுமின்றி, கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என அரசு கருதுகிறது. எனவே, ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.

முன்னாள் முதல்வர் அண்ணா வின் நூற்றாண்டை கொண்டாடி மகிழ்ந்த கருணாநிதி, சென்னை கோட்டூர்புரத்தில் 8 மாடிகளுடன் 1,200 பேர் உட்கார்ந்து படிக்கும் வகையில், 3.33 லட்சம் சதுரஅடி கொண்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கினார். தொடர்ந்து, மதுரையில் கடந்த ஆண்டு ஜூலை 15-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தேன். தொடர்ந்து, கோவையிலும் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

திருச்சியில் அறிவுக் களஞ்சியம்: அந்த வரிசையில், காவிரி கரையில் அமைந்துள்ள மாநகரமான திருச்சியில் கலைஞர் பெயரால் உலகத்தரம் வாய்ந்த மாபெரும்நூலகம், அறிவுசார் மையம் அமைக்கப்படும். பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழகத்தின் நெற்களஞ்சிய பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அது அமையும்.

இவ்வாறு முதல்வர் தெரி வித்தார்.

இதைத் தொடர்ந்து, அமைச் சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணி, அன்பில் மகேஸ், டிஆர்பி ராஜா மற்றும் உறுப்பினர்கள் ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), அப்துல் சமது (மமக), சின்னப்பா (மதிமுக), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) நாகை மாலி (மார்க்சிஸ்ட்), பாலாஜி (விசிக), தாரகை கத்பர்ட் (காங்கிரஸ்), ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் (திமுக) ஆகியோர் வரவேற்று பேசினர்.

உறுப்பினர்கள் கோரிக்கை: ‘‘பெங்களூருவில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ள சூழலில், அருகில் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையில் உள்ள தூரத்தை கணக்கிட்டு அறிவிப்பு வெளியிட வேண்டும்’’ என்று எம்.ஆர்.காந்தி (பாஜக) கூறினார்.

அருள் (பாமக) பேசும்போது, ‘‘சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். கருணாநிதிக்கு மிகவும் பிடித்த மான சேலத்திலும் நூலகம், அறிவுசார் மையம் அமைக்க வேண்டும்’’என்றார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், ‘‘இதற்கான அறிவிப்பை அடுத்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்’’ என்றார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் (காங்கிரஸ்) பேசும்போது, ‘‘சேலம் விமான நிலையத்தை அவ்வப்போது மூடிவிடுவார்கள். இதை சேலம் - ஈரோடு இடையே உள்ள சங்ககிரிக்கு மாற்றினால் மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x