Published : 28 Jun 2024 07:41 AM
Last Updated : 28 Jun 2024 07:41 AM
திருவாரூர் / கும்பகோணம்: தமிழக அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான ஊக்கத்தொகை ஏமாற்றமளிப்பதாகவும், ஒடிசா, சத்தீஸ்கர்போல குவிண்டாலுக்கு ரூ.3,100வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மத்திய அரசு காரீப் 2024-25-ம்பருவத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.2,300, சன்னரக நெல்லுக்கு ரூ.2,320 என நிர்ணயித்துள்ளது. தொடர்ந்து, தமிழக அரசு சாதாரணநெல்லுக்கு ரூ.105, சன்னரக நெல்லுக்கு ரூ.130 என கூடுதல் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.
இதனால், சாதாரண நெல் ரூ.2,405, சன்னரக நெல் ரூ.2,450என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒடிசா, சத்தீஸ்கர்போல... இது தொடர்பாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை அந்த தொகை வழங்கப்படவில்லை. உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டதால் குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம்.
இந்நிலையில், மத்திய அரசுகுவிண்டாலுக்கு ரூ.2,300 அறிவித்துள்ளது. தமிழக அரசு ரூ.100 உயர்த்தி, ரூ.2,400 என அறிவித்துள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் குவிண்டாலுக்கு ரூ.3,100வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களை பின்பற்றி தமிழகத்திலும் குவிண்டாலுக்கு ரூ.3,100 வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏமாற்றும் செயல்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கச் செயலாளர் சுந்தர.விமலநாதன் கூறியதாவது:
தமிழக அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான ஊக்கத்தொகை ஏற்புடையதாக இல்லை.2021 திமுக தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று கூறிவிட்டு, 3 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் ரூ,2,400 அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்அறிக்கையில் கூறியபடி அடுத்த ஆண்டு ரூ.2,500 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு அடுத்த காரீப்பருவத்தின்போது ரூ.100 கூடுதலாக அறிவித்தாலே ரூ.2,500 ஆகிவிடும். முதல்வரின் இந்த அறிவிப்பு, தமிழக விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும். இதனால், முதல்வர் மீதுள்ள நம்பிக்கையை விவசாயிகள் இழந்துவிட்டார்கள்.
ஒடிசாவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அறிவித்தபடி குவிண்டாலுக்கு ரூ.3,100 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டே குவிண்டாலுக்கு ரூ.3,100 வழங்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்திலும் ரூ.3,100 வழங்க வேண்டும். இவ்வாறு சுந்தர.விமலநாதன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT