Published : 28 Jun 2024 06:10 AM
Last Updated : 28 Jun 2024 06:10 AM
சென்னை: சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து மைக்ரோ சிப் பொருத்த இருப்பதாகவும், உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்தஇருப்பதாகவும் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் நாய்களால் ஏற்படும் இடையூறுகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, பல்வேறுதுறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டம், மேயர்ஆர்.பிரியா தலைமையில்,ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அதில் மேயர் பிரியா பேசியதாவது:
மக்களுக்கு இடையூறு: சென்னையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகள், தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் முதல்முறையாக பிடிபட்டால் ரூ.5ஆயிரம், 2-வது முறை பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் என்றஅளவில் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தபடி, 3-வது முறையாக பிடிபடும் மாடுகளை ஏலம் விடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாடுகளைபிடிக்கும்போது விதிக்கப்படும் அபராதத் தொகையைமேலும் அதிகப்படுத்தி வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசுக்கு கருத்துரு: கண்காணிப்பின்றி தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்படும் போது, அவற்றை அடையாளப்படுத்த மைக்ரோ சிப் பொருத்தி, அதன்மூலம் அதே மாடு 3-ம் முறை பிடிபட்டால் அவற்றை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள குறிப்பிடத்தக்க இடங்களில் மாடுகளை வளர்க்கவும், வெளியில் விடவும் தடைசெய்வதற்கு சட்ட ஆலோசனைகளை பெற்று அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.
புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை மற்றும் லாயிட்ஸ் காலனி ஆகிய 3 இடங்களில் ரூ.20 கோடியில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும், 2 புதிய மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
7 நாய் பிடிக்கும் வாகனங்கள், நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் 3 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு தெருநாய்களுக்கு கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் எஸ்.அமிர்த ஜோதி, மாநகராட்சி கூடுதல் ஆணையாளர்கள் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, ஆர்.லலிதா,வட்டார துணை ஆணையர்கள் எம்.பி.அமித், கே.ஜெ.பிரவீன் குமார், கட்டா ரவி தேஜா, பிராணிகள் நல வாரிய தலைமை செயல்அலுவலர் சுரேஷ் சுப்ரமணியம், உறுப்பினர் ஸ்ருதி, காவல் இணை ஆணையர் (போக்குவரத்து) மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT