Published : 28 Jun 2024 06:17 AM
Last Updated : 28 Jun 2024 06:17 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் நேற்று பதில் அளித்து, அத்துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் முதல்முறையாக கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் கடந்தாண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
இவ்வளவு சிறப்பான ஒரு கேலோ இந்தியா விளையாட்டு நிகழ்ச்சியை நான் எங்குமே பார்த்ததில்லை என்று பிரதமர் குறிப்பிட்டுப் பாராட்டினார். இந்த கேலோஇந்தியா விளையாட்டு போட்டியை நடத்த மத்தியப் பிரதேச மாநிலத் துக்கு, சென்ற ஆண்டு மத்திய அரசு கொடுத்த நிதி ரூ.25 கோடி.
இந்தமுறை தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்த நிதி வெறும் ரூ.10 கோடி. தமிழகம் முழுவதும் விளையாட்டு கட்டமைப்பு வசதிகள்ரூ.355 கோடியில் உருவாக்கப்பட் டுள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் பணி இந்தாண்டில் தொடங்கப்படும்.
ரூ.11,200 கோடியில் பணிகள்: ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ், ஒவ்வொருதொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் அளித்த கோரிக்கைகளில், ரூ.11,200 கோடியில் 818 பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மட்டும், ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 210 பணிகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையின் வளர்ச்சியில் வடசென்னை மக்களின் பங்கு முக்கியமானது. அதன், சமூக பொருளாதார வளர்ச்சியை மனதில் கொண்டு, வடசென்னையின் வளர்ச்சியில் உள்ள இடைவெளியை போக்கிட ரூ.4,000 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பட்டா வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை போக்கிட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். அடுத்த மாதம் 5 ஆயிரம் பட்டாக்கள் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்க இருக்கிறோம். இந்த நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க முதல்வரால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT