பொதுநல வழக்குகளை தவறாகப் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

பொதுநல வழக்குகளை தவறாகப் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

மதுரை: பொதுநல வழக்குகளை தவறாக பயன்படுத்தக் கூடாது. அடிப்படை வசதிகள் கோரி பொதுநல மனுத் தாக்கல் செய்தால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி மலையடிபுதூர், செங்கலக்குறிச்சி ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக்கோரி நவீன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு இன்று விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், ''தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் கிராம ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் அடிப்படை வசதி குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பாக பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்படும் போது எதிர்மனுதாரர்களின் பதில் பெறாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடுவது நீதிமன்றத்தின் பணி அல்ல. அரசு நிர்வாகம் தான் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும். கிராமங்களில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு போதுமான நிதி ஆதாரம் இருக்க வேண்டும். தமிழக பட்ஜெட்டில் அரசுப் பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்டவற்றுக்காகவே பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதனால் பொது நல வழக்குகளை தவறாக பயன்படுத்தக்கூடாது.

எந்த வகையான பொதுநல வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்பதை வரமுறைப்படுத்த வேண்டும். பொதுநல மனு தாக்கல் செய்தவுடனேயே நிவாரணத்தை எதிர்பார்க்கக்கூடாது. உயர்நீதிமன்ற கிளையில் வழக்குகள் அதிகமாக உள்ளது.

கிராமங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றும் பணி அரசு அதிகாரிகளுடையது. அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொது நல வழக்குகளைத் தொடர்ந்தால், உத்தரவு பிறப்பிக்க இயலாது. இந்த வழக்கில் மனுதாரர் உரிய அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் பெறலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in