வளர்ந்த மாநிலமாக இருக்கும் தமிழகம் அதிக கடன் சுமையை வைத்திருக்கும் மாநிலமாகவும் உள்ளது: வானதி சீனிவாசன் விமர்சனம்

வானதி சீனிவாசன் | கோப்புப் படம்
வானதி சீனிவாசன் | கோப்புப் படம்
Updated on
2 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்றுநிதி மற்றும் மனிதவள மேலாண்மை,பொதுத்துறை, திட்டம் வளர்ச்சி சிறப்பு முயற்சிகள் துறை, மின்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதத்தில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, “கோவை தெற்கு தொகுதி, நகரப்பகுதி என்பதால் வாகன நிறுத்தத்துக்கு மக்கள் சிரமப்படுகின்றனர். அதனால், மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்க வேண்டும். கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி பணிகள் இந்த அரசு வந்தபிறகு மிகவும் மெதுவாக நிறைவடைந்தது. ஆனால், பராமரிப்பு மோசமாக உள்ளது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவிலேயே வளர்ந்த மாநிலம், மிக வேகமாக முன்னேறியமாநிலம் தமிழகம். ஆனால், கூடுதலாக இன்னொரு பெருமை, அதிகமாக கடன் சுமை வைத்திருக்கும் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது.

தமிழகத்துக்கு ஒரு ரூபாய்க்கு 29 பைசா, கேரளாவுக்கு 19 பைசா, உத்தரபிரதேசம், பிஹாருக்கு இவ்வளவு பைசா என்று பட்டியல் கொடுக்கிறார். கோவையில் இருந்து ஒரு ரூபாய் வரி வருவாய் வாங்கினால் கோவைக்கு எவ்வளவு கொடுக்கிறீர்கள். அதேபோல், தருமபுரி, அரியலூருக்கு எவ்வளவு கொடுக்கிறீர்கள். மாநில வாரியாக பேசுவது மாதிரியே, தமிழகத்தில் மாவட்ட வாரியாகவும் ஒரு ரூபாய்க்கு எவ்வளவு திருப்பி கொடுக்கிறீர்கள் என்று நிதியமைச்சர் தெரிவிக்க வேண்டும்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: நாங்கள் ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு வைக்கவில்லை. எல்லா மாவட்டத்துக்கும் சமச்சீரான வளர்ச்சி வேண்டும் என்பதற்காக எல்லா மாவட்டத்துக்கும் கொடுத்து வருகிறோம். பட்ஜெட்டில் கோவைக்கு அதிகமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொச்சிக்கு மெட்ரோ ரயில் கொடுக்கும் மத்திய அரசு அதற்கு முன்பாக இருக்கும் கோவைக்கு கொடுக்கவில்லை. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பணம் கொடுக்க மறுக்கிறார்கள்.

பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்: அதிகமான ஸ்மார்ட்சிட்டி தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. டிஃபென்ஸ் காரிடார் உத்தரபிரதேசத்துக்கு கொடுத்தார். அடுத்து, குஜராத்துக்கோ, மகாராஷ்டிராவுக்கோ கொடுக்கவில்லை. தமிழகத்துக்கு தான் கொடுத்துள்ளார்.

மத்திய அரசின் நேரடி திட்டங்கள் மூலமாக 300 சதவீதம் அதிகமான நிதியுதவியை தமிழகம் பெற்றுள்ளது. இது, 2004 முதல் 2014-ஐவிட அதிகமாகும். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு சர்வதேச நிறுவனம் மூலம் கடன் உதவிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், அனுமதிக்கப்பட்ட கடன் அளவில், 15 சதவீதம் மட்டுமே தமிழக அரசு செலவிட்டுள்ளது. கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது.

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிகமுள்ள எங்கள் பகுதியில் மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சிறப்பு திட்டத்தை ஏற்படுத்தித்தர வேண்டும். சென்னையில் மட்டும் போக்குவரத்து சிக்னலுக்கான மின்சார கட்டணத்தை காவல் துறை கொடுக்கிறது. மற்ற நகரங்களில் போக்குவரத்து சிக்னலுக்கான மின்சார கட்டணத்தை யார் கொடுக்கிறார்கள்? ஜிஎஸ்டி வசூலிப்பில் தமிழகம் 5-வது இடத்துக்கு சென்றுள்ளது. ஆனால், உத்தரபிரதேசம் ஜிஎஸ்டி வசூலிப்பில்முன்னேறியுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு: உறுப்பினர் எப்போது பேசினாலும் கோவைக்கு எதுவும் செய்யவில்லை என்கிறார். கோவை சாலைக்கு மட்டும் இது வரை ரூ.300கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவைக்கு மழைநீர் வடிகால்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: அனைத்து போக்குவரத்து சிக்னல்களின் மின்சார கட்டணத்தையும் காவல்துறைதான் கொடுக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in