Published : 27 Jun 2024 07:43 AM
Last Updated : 27 Jun 2024 07:43 AM

நடுநிலையுடன் செயல்படாமல் பேரவை தலைவர் அப்பாவு அரசியல் பேசுகிறார்: பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவையில் இருந்து நேற்றுவெளியேற்றப்பட்ட பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் விதி எண் 56-ன்படி, அவையை ஒத்திவைத்து விவாதிக்க தீர்மானம் கொடுத்தோம். இதற்காக, பேரவைத் தலைவரிடம் அனுமதி கேட்டு எங்கள் கட்சி கொறடா மனு கொடுத்துள்ளார்.

நேற்றைய தினம் சட்டப்பேரவையில், விதியின்படி நாங்கள் நடந்து கொண்டால் சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி அளிப்பதாக பேரவைத் தலைவர் கூறினார். ஆனால், இன்று விதிப்படி அவர் நடக்கவில்லை.

பேரவைத் தலைவர் நடுநிலையாக செயல்படவில்லை. மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி பிரச்சினையின் ஆழத்தைக் கருத்தில் கொண்டு அதை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவது எதிர்க்கட்சி என்ற முறையில் எங்களுக்கு பிரதான கடமை உள்ளது.

பேரவைத் தலைவர் அரசியல் பேச முற்படுகிறார். அந்த இடத்தில்அமர்ந்து கொண்டு அரசியல் பேசுவது முறை அல்ல. அதை ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்து அரசியல் பேச வேண்டும்.

அதிமுக ஆட்சி இருக்கும்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தபோது, அதனை தீர ஆய்வு செய்து 2020 டிச.21-ம் தேதியன்று அதிமுக ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அது அப்படியே நின்று விட்டது.

திமுக இன்றைக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் கொண்டுவருவதற்கு காரணம் விக்கிரவாண்டி தேர்தல். வன்னியர் மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய அத்தொகுதியில் அவர்களின் வாக்கைப் பெறுவதற்காக அவசர அவசரமாக சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வருகிறார்கள்.

சம்பிரதாயத்துக்காக திமுக அரசு பேரவையை நடத்துகிறது.

இவ்வாறு பழனிசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x