Published : 28 May 2018 07:37 am

Updated : 28 May 2018 07:37 am

 

Published : 28 May 2018 07:37 AM
Last Updated : 28 May 2018 07:37 AM

ஜவஹர்லால் நேருவின் அரிய படங்களுடன் ஆ.கோபண்ணா தொகுத்த நூல் வெளியீடு; பிரணாப் முகர்ஜி வெளியிட மன்மோகன் சிங் பெற்றுக் கொண்டார்

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடர்பான அரிய புகைப்படங்களைத் தொகுத்து, தமிழக காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா ஆங்கில நூலாக வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்நூலின் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.

நேருவின் 54-வது நினைவு தினமான நேற்று டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆ.கோபண்ணா தொகுத்துள்ள ஜவஹர்லால் நேரு தொடர்பான அரிய புகைப்பட வாழ்க்கை வரலாறு (Jawaharlal Nehru: An Illustrated Biography) நூலை வெளியிட்டார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, தி ‘இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய ராஜீவ் நேத்ரா நன்றி கூறினார்.


முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, வட சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆர்.மனோகர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

நூலை வெளியிட்டு பிராணாப் முகர்ஜி பேசும்போது, “விடுதலைக்குப் பிந்தைய நவீன இந்தியாவை கட்டமைத்த சிற்பியான நேருவை பற்றி இதுபோன்ற நூல் இதுவரை வெளிவரவில்லை. அந்த அளவுக்கு அரிய தகவல்கள், புகைப்படங்களுடன் மிக நேர்த்தியாக நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஹமீது அன்சாரி பேசும்போது, “வகுப்புவாதம் தலைதூக்கியுள்ள இந்த காலகட்டத்தில் அதனை முறியடிக்க நேருவைப் பற்றிய இந்த நூல் உதவும். இந்நூலை இளைஞர்களிடம் அதிக அளவில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்” என்றார்.

என்.ராம் பேசும்போது, “10 ஆண்டுகள் உழைப்பில் இந்த நூலை கோபண்ணா உருவாக்கியிருக்கிறார். மதவாதத்துக்கு எதிராக கருத்து ரீதியாக வாதம் செய்பவர்களுக்கும் சிறந்த ஆயுதமாக இந்நூல் இருக்கும். சரியான நேரத்தில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.

ஆ.கோபண்ணா தனது ஏற்புரையில், “விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஒன்பதரை ஆண்டுகள் சிறையில் இருந்த நேரு, 16 ஆண்டுகள் பிரதமராக இருந்து புதிய, நவீன இந்தியாவை உருவாக்கியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை 'ஜவஹர்லால் நேரு: ஆன் இல்லஸ்ட்ரேடட் பயோகிராபி' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தொகுத்துள்ளேன். 700 அரிய புகைப்படங்களுடன் சர்வதேச தரத்தில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘நேருவின் புகழை களங்கப்படுத்தவும், அவரது பங்களிப்பை துடைத்தெறியவும் முயற்சிகள் நடந்துவரும் நிலையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. நேருவின் தொலைநோக்குப் பார்வை குறித்து மிகச் சரளமாக இந்நூலில் எழுதப்பட்டுள்ளது’ என பாராட்டியது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைSign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author