Published : 27 Jun 2024 09:10 AM
Last Updated : 27 Jun 2024 09:10 AM
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக மற்றும் பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 3-க்கு தள்ளி வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷத்தன்மை கொண்ட கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக சார்பில் வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான ஐ.எஸ்.இன்பதுரை, பாமக தரப்பில் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவைத் தலைவருமான வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “இந்த சம்பவம் தொடர்பான அரசின் அறிக்கை தயாராக உள்ளது. அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். எனவே வழக்கு விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்” என கோரினார்.
மனுதாரரான கே.பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, “இந்த வழக்கில் உடனடியாக புலன் விசாரணையை தொடங்க வேண்டும். உரிய நேரத்தில் தொடங்காவிட்டால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும். அது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாகி விடும்” என்றார்.
அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.
அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி, “ஒவ்வோர் ஆண்டும் கள்ளச்சாராய மரணங்கள் அரங்கேறுகின்றன. இதுபோன்ற வழக்குகளில் தாமதமான விசாரணை காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு விடுகின்றனர். அதனால் விசாரணையை விரைவாக நடத்த வேண்டும்” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 3-க்கு தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT