Published : 24 May 2018 10:17 AM
Last Updated : 24 May 2018 10:17 AM

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி; புரட்சிகர இளைஞர் முன்னணியினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது: சென்னையில் போலீஸாருடன் தள்ளுமுள்ளு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற புரட்சிகர இளைஞர் முன்னணியினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் நேற்று போராட்டங்கள் மற்றும் சாலை மறியல் நடந்தன.

சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருப்பதாக புரட்சிகர இளைஞர் முன்னணியினர் அறிவித்து இருந்தனர். இதனால் நேற்று தலைமை செயலகம் சுற்றுப்பகுதி முழுவதும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்தவர்களை ரிசர்வ் வங்கி அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் முன்னணித் தலைவர் திலீபன் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

வள்ளுவர் கோட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூடி போராட்டம் நடத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ. பீமாராவ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னை அயோத்திக்குப்பம் மற்றும் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கலங்கரைவிளக்கம் அருகே காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோ அருகே துணை இயக்குநர்கள் மற்றும் துணை நடிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து கோஷங்களும் எழுப்பினர்.

31 இடங்களில்...

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நேற்று 31 இடங்களில் மறியல் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 2,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு கலைந்து சென்றனர். பாரிமுனை மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் மறியலில் ஈடுபட்டு கலைந்து செல்ல மறுத்த 317 பேர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x