“நெருக்கடி நிலை... வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது” - செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை | கோப்புப்படம்
செல்வப்பெருந்தகை | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: நெருக்கடி நிலை முடிந்ததும் காந்தி குடும்பம் வெளிநாடு தப்ப முயன்றதாக அண்ணாமலை கூறுவது அவதூறு செய்தி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும், மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலும் தேசிய ஒற்றுமை பயணங்களை மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து உரையாடி, பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதற்காக குரல் கொடுத்து மக்கள் தலைவராக உயர்ந்து நின்ற ராகுல் காந்தி, மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இன்று பொறுப்பேற்பது நாட்டு மக்களிடையே மிகுந்த எழுச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த மக்களவை தேர்தலில் 10 ஆண்டு கால நரேந்திர மோடியின் மக்கள் விரோத, பாசிச, அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து தமது பரப்புரையின் மூலம் மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்டவர் ராகுல் காந்தி. அவரது பரப்புரையின் காரணமாக பா.ஜ.க.வுக்கு மீண்டும் ஆட்சி அமைய அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று அரசமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்ற ஜனநாயகம் வழங்கியிருக்கிற எதிர்கட்சித் தலைவர் என்ற பதவியை முதன்முறையாக ராகுல் காந்தி பெற்றிருக்கிறார். இது இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். ராகுல் காந்தி நியமனத்தை தமிழ்நாடு வரவேற்று மகிழ்கிறது.

நெருக்கடி நிலை முடிந்தவுடன் ராஜீவ் காந்தியும், சஞ்ஜய் காந்தியும் ஆட்சியாளர்களுக்குப் பயந்து வெளிநாடுகளுக்கு தப்பியோட முயன்றார்கள் என்று ஓர் அப்பட்டமான அவதூறு செய்தியை அரைவேக்காடு அண்ணாமலை கூறியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். நெருக்கடி நிலை முடிந்ததும் பிரதமர் இந்திரா காந்தி நடத்திய தேர்தலில் அவரே வெற்றி வாய்ப்பை இழந்ததன் மூலம் ஜனநாயகத்தை உலகத்துக்கு நிரூபித்தார்.

எந்த நிலையிலும் எவருக்கும் அஞ்சாமல் விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டு காலம் சிறையில் இருந்த நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. அறிந்திருக்க வாய்ப்பில்லை. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே, வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in