“10.5% இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பொய்யான தகவல்களை கூறுகிறார்” - அன்புமணி குற்றச்சாட்டு

“10.5% இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பொய்யான தகவல்களை கூறுகிறார்” - அன்புமணி குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: “வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வரும் அமைச்சர்களும் தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி வருகின்றனர்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பேசியுள்ளார். இது வன்னியர்களுக்கு எதிரான வன்மத்தையே காட்டுகிறது.

பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது என்று பொய்யான தகவல்களையும் கூறி வருகிறார்கள். அந்த மாநிலத்தில் கூடுதல் இடஒதுக்கீடு வழங்கியதைத் தான் உச்ச நீதிமன்றம் தடை செய்திருக்கிறதே தவிர சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதிக்கவில்லை. இதனை முதல்வரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. மாறாக தரவுகள் அடிப்படையில் இட ஒதுக்கீடு தரலாம் என்று தான் தீர்ப்பளித்துள்ளது.

அது போல சாதி மாதிரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று இந்திய புள்ளிவிவர சட்டம் கூறுகிறது. எனவே, மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறாமல் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி எந்த சாதியினர் என்ன நிலையில் உள்ளனர் என்பதை அறிந்து அவர்களை கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார அடிப்படையில் மேம்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும்.

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு பெறுவதற்காக நாங்கள் தொடர்ந்து சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராடுவோம். தேவைப்பட்டால் கடுமையான போராட்டம் நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம். வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கருடன் விவாதிக்க தயாராக உள்ளேன். எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் விவாதிக்க தயாராக இருக்கிறேன். அதற்கான நாள், இடம், நேரத்தை அவர்களே சொல்லட்டும்.

இந்த உள் இடஒதுக்கீடு விவகாரம் சாதி பிரச்சினை இல்லை. மாறாக சமூக நீதி வாழ்வாதார பிரச்சினை என்பதால் இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தை பொறுத்தவரை இது மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாக இருப்பதால் சிபிஐ விசாரிப்பது மட்டுமே உண்மை நிலையை வெளிக்கொண்டுவரும். மேலும், அரசியல் புள்ளிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in