Published : 26 Jun 2024 05:48 AM
Last Updated : 26 Jun 2024 05:48 AM

குரூப் 1 மூலம் தேர்வு செய்யப்பட்ட 95 பேருக்கு நியமன ஆணை வழங்கினார் முதல்வர்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1-ல் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 95 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு,கடந்த 3 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வு முகமைகள்மூலம் 32,774 பேர், அரசுத் துறை நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 32,709 பேர் என மொத்தம் 65,483 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் குரூப்-1 பணிகளில் 21 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 25 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 7 உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி), 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் என மொத்தம் 95 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பணி நியமனஆணை வழங்கும் அடையாளமாக, சென்னை தலைமைச் செயலகத்தில் 14 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். முதல்வருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, புதிதாக பணி நியமனம் பெற்றவர்களை முதல்வர் ஸ்டாலினுக்கு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு, மனித வள மேலாண்மை துறைசெயலர் க.நந்தகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நியமன ஆணை பெற்ற பயிற்சி அலுவலர்களுக்கு சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அடிப்படை பயிற்சி தொடங்க உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x