‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் நில எடுப்பு பணிகளுக்கு ரூ.1,055 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் நில எடுப்பு பணிகளுக்கு ரூ.1,055 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) மற்றும் நெடுஞ்சாலைத் துறை தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:

பாரம்பரிய கட்டிடங்களைப் புனரமைக்கும் பணிகளை செம்மைப்படுத்த சென்னையில் மரபு கட்டிடங்கள் வட்ட அலுவலகம் ஏற்படுத்தப்படும். சென்னை தி.நகர் காமராஜர் இல்லம், பூந்தமல்லி விக்டரி நினைவு பார்வையற்றோர் பள்ளி கட்டிடம், நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள மெட்ராஸ் இலக்கியச் சங்க கட்டிடம், திருச்சி டவுண் ஹாலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம், கன்னியாகுமரி இடலாகுடியில் உள்ள சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக் கட்டிடம், ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு நதிக்கரையில் உள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவுச் சின்னங்கள் ஆகியவை ரூ.43.34 கோடியில் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில், 7 புறவழிச்சாலை, ஒரு நடைமேம்பாலம், 6 சாலைகள் மேம்பாடு, 4 ஆற்றுப்பாலங்கள் மற்றும் ஒரு மழைநீர் வடிகால் அமைக்க தேவையான நில எடுப்பு பணிகள் ரூ.1,055 கோடியில் மேற்கொள்ளப்படும்.

நடப்பாண்டில், 200 கி.மீ நீளச்சாலைகளை 4 வழித்தடமாகவும், 550 கி.மீ நீளச்சாலைகளை இருவழித்தடமாகவும் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும். முதல்வரின் முத்தாய்ப்பான திட்டத்தில் 50 தரைப்பாலங்கள் ரூ.200கோடியில் உயர்மட்டப் பாலங்களாகக் கட்டப்படும். சாலை சந்திப்பு மேம்பாட்டு பணி ரூ.300 கோடியில் மேற்கொள்ளப்படும்.

தென்காசி, ஆற்காடு, போடிநாயக்கனூர், திருநெல்வேலி ஆகிய 4 நகரங்களுக்கு புறவழிச்சாலை, ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முதல் அரசுமருத்துவமனை வரை புதிய இணைப்பு சாலை ரூ.321 கோடியில் அமைக்கப்படும்.

சென்னையில் வேளச்சேரி ரயில்வே நிலைய பேருந்து நிறுத்தம், சென்னை உள்வட்டச்சாலையில், கோயம்பேடு சந்திப்பு அருகில் 2 இடங்களில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம், காமாட்சி மருத்துவமனை முதல் துரைப்பாக்கம் வரை மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் ரூ.36 கோடியில் மேற்கொள்ளப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in