டிடிவி தினகரனுடன் அண்ணாமலை சந்திப்பு: அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை

டிடிவி தினகரனுடன் அண்ணாமலை சந்திப்பு: அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை

Published on

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. பாஜக கூட்டணியில் திருச்சி, தேனி என 2 மக்களவைத் தொகுதிகள் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டன. இதில், தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டார்.

ஆனால், மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் சென்றார். இருவரும் சுமார் 2 மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கட்சியினர் தரப்பில் கூறப்படுவதாவது: மக்களவைத் தேர்தலில் அதிமுக பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வி.கே.சசிகலா, ‘இனிமேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டேன். அனைவரும் ஒன்றுசேர வேண்டும். அரசியலில் என்ட்ரி கொடுக்கவுள்ளேன்’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வு, சசிகலா கருத்தை ஆமோதித்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு, அதிமுகவை மீட்பதில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாத நிலையில் அது பாஜக கூட்டணி தங்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே அங்கு போட்டியிடும் கூட்டணிக் கட்சியான பாமகவை வெற்றி பெறச்செய்வதற்கு அதிமுக வாக்குகளை தங்கள் பக்கம் திருப்பிவிடுவதற்கான வியூகங்களை வகுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதவிர கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் 60-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வருவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in