Published : 10 May 2018 02:13 PM
Last Updated : 10 May 2018 02:13 PM

காலா படத்துக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு: ரஜினிகாந்த், ரஞ்சித், திரைப்பட வர்த்தக சபைக்கு நோட்டீஸ்

'காலா' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித், வுண்டர்பார் பட நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், பட ரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' திரைப்படத்தை வெளியிட தடை கோரி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் காப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது. அதன்படி ராஜ சேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 'காலா' படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, 1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை கரிகாலன் பட தலைப்பை ஆண்டு தோறும் புதுப்பித்து வந்த தென்னிந்திய வர்த்தக சபை அதன்பிறகு 'கரிகாலன்' என்ற தலைப்பை புதுப்பிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

மேலும், தற்போது ரஜினிகாந்த நடித்த படத்திற்கு 'கரிகாலன்' என்ற தனது தலைப்பைப் பயன்படுத்தி 'காலா' படத்தை உருவாக்கி வருகிறார்கள், எனவே தலைப்பை புதுப்பிப்பது தொடர்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், 'காலா' படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த மாதம் 19-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, இதில் உத்தரவிட்ட நீதிபதி கார்த்திகேயன், கரிகாலன் என்ற 'காலா' தலைப்பு என்னுடையது என்ற மனுதரார் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மனுதரார் கூறிய குற்றச்சாட்டுகள் மற்றும் புகாருக்கு எந்த அடிப்படை முகாந்திரம் இல்லை. மேலும் படத்தின் கதை உள்ளடங்கிய விவரங்களை முறையாகப் பதிவு செய்யவில்லை.

எனவே அனைத்து மொழிகளிலும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகின்றது என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, கரிகாலன் அடைமொழியில்லாமல் படம் வெளியாவதில் ஆட்சேபனை இல்லை என ராஜசேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் 'காலா' படக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தலைப்பை பதிவுசெய்துவிட்டு அதை புதுப்பிக்காமல் இருந்தால் அந்த தலைப்பை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என தெரிவித்தார். இதையடுத்து திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என்றும், விசாரணைக்காக வழக்கை படம் வெளியாகும் ஜூன் 7-க்கு முன்பாக பட்டியலிட முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ராஜசேகரின் மனு குறித்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித், வுண்டர்பார் பட நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x