

33 வருவாய் துறை அலுவலக கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் ரூ.41.25 கோடியில் கட்டப்படும். புயல், அதிகனமழை, வெள்ளப் பெருக்கு போன்ற பேரிடர்களால் பாதிப்புக்குள்ளாகும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 நிரந்தர பேரிடர் மீட்பு, நிவாரண மையங்கள் ரூ.36 கோடியில் அமைக்கப்படும்.
தூத்துக்குடியில் ரூ.17.50 கோடியில் 2 பல்நோக்கு நிவாரண மையங்கள் கட்டப்படும். பேரிடர்களின்போது பொது மக்கள், மீனவர்கள், சுற்றுலா பயணிகளை எச்சரிக்க ரூ.13.25 கோடியில் 1,000 முன்னெச்சரிக்கை அமைப்புகள் நிறுவப்படும். பேரிடர் கால படகு, மீட்பு வாகனம் உள்ளிட்டவை ரூ.105.36 கோடியில் வாங்கப்படும்.
காட்டுத் தீ தடுப்பு நடவடிக்கைக்காக வன அலுவலர்களுக்கு பயிற்சி, தீ தடுப்பு உபகரணங்கள் ரூ.15 கோடியிலும், மீனவர்கள், மீன்வளத் துறை அலுவலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி ரூ.1.07 கோடியிலும் வழங்கப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்களில் 500 தன்னார்வலர்களுக்கு ரூ.2 கோடியில் பேரிடர் மீட்பு, நிவாரணம் குறித்து பயிற்சி வழங்கப்படும்.
பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெப்ப அலை தாக்கம், மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும். பயனாளிகளுக்கான வீட்டு மனை ஒப்படை ஆணைகள் இணையவழியில் வழங்கப்படும். நவீன நில அளவை கருவி மூலம் பராமரிப்பு நில அளவை செய்து பட்டா வழங்கப்படும். பத்திரப் பதிவின்போது சொத்து விவரங்களை சரிபார்க்க, புலப்பட தரவுகள் அத்துறைக்கு பகிரப்படும் என்பது உட்பட 25 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.