சட்டப்பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு: 10.5% இடஒதுக்கீடு குறித்து பேச அனுமதிக்கவில்லை எனப் புகார்

கோப்புப்படம் - பாமக எம்எல்ஏக்கள்
கோப்புப்படம் - பாமக எம்எல்ஏக்கள்
Updated on
1 min read

சென்னை: 10.5% வன்னியர் இடஒதுக்கீடு பற்றி சட்டப்பேரவை தலைவர் பேச அனுமதிக்காததை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சி உறுப்பினர் ஜி.கே.மணி பேசும்போது "10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் வன்னியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய வட மாவட்டங்களில் மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு கல்வி, சமூக, பொருளாதார ரீதியாக வன்னியர்கள் பின்தங்கி இருப்பதே காரணம். எனவே அவர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேசினார்.

அதற்கு, இதுதொடர்பான வழக்கில், 'மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தான் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்த முடியும்' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர்களும் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த பிரச்சினையை ஜி.கே மணி பேசும்போது “சாதிவாரி கணக்கெடுப்பூக்கும் மாநில அரசு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கும் சம்பந்தமில்லை. இரண்டும் தனித்தனியான பிரச்சினைகள்” என்று வலியுறுத்தினார். தொடர்ந்து அவரை பேச அனுமதிக்காததால் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே மணி, “வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பிரச்சினையை அதிகாரிகளும் அமைச்சர்களும் திசை திருப்பப் பார்க்கின்றனர். நான் அரசை குறை சொல்லவோ வேறு எதற்காகவும் இந்த பிரச்சினையை எழுப்பவில்லை. ஆனால் அமைச்சர்கள் இந்த பிரச்சினையை தொடர்ந்து திசை திருப்பும் நோக்கத்தில் பேசுவதுடன், தேர்தல் பற்றியும் கூட்டணி பற்றியும் அரசியல் பற்றியும் தான் எங்கள் மீது குறை கூறுகிறார்கள். தொடர்ந்து 10.5 இட ஒதுக்கீடை அமல்படுத்த வலியுறுத்தி பேச அனுமதிக்காததால் நாங்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம்” என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in