Published : 24 Jun 2024 06:45 AM
Last Updated : 24 Jun 2024 06:45 AM
சென்னை: தமிழகத்தில் மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்க 18 மாவட்டங்களில் ரூ.30 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றுஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதானவிவாத்ததுக்கு பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில் மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிப்பதற்கான சிறப்புத்திட்டம் சேலம், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும்.
உயர் தொழில்நுட்ப சாகுபடியை விவசாயிகளிடம் ஊக்குவித்து உற்பத்தியை பெருக்க ரூ.10.19 கோடி மானியத்தில் பசுமைக் குடில், நிழல் வலைக்குடில்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் துவரை உள்ளிட்ட பிற பயறுவகைகளின் பரப்பு விரிவாக்கத்துக்கும் அவற்றின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையிலும், ரூ.10 கோடி ஒதுக்கப்படும். மிகச்சன்ன ரக நெற்பயிர் சாகுபடியை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் வகையில் 2 ஆயிரம் டன் மிகச்சன்ன வகை உயர் விளைச்சல் நெல்ரகங்களின் சான்று விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க ரூ.8.60 கோடி ஒதுக்கப்படும்.
டெல்டா மாவட்டங்களில் வறட்சிக் காலங்களில் பாசன நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களை தூர்வாரி மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கப்படும். அதிக காய்கனி வரத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் 20 உழவர் சந்தைகளின் செயல்பாடுகளை மேலும் அதிகரிக்க அவற்றின் கட்டமைப்பு வசதிகள் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும்.
திருவண்ணாமலை மாவட்டம் கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா, சென்னை செம்மொழிப்பூங்கா, ராமநாதபுரம் பாலை மரபணுப் பூங்கா ஆகியவற்றின் அடிப்படை வசதிகள் ரூ.1.22 கோடியில் மேம்படுத்தப்படும். அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் அலங்கார மலர்ச்செடிகள், அலங்காரத் தாவரங்களின் நாற்றுக்களை உற்பத்தி செய்து வழங்க ரூ.1 கோடி ஒதுக்கப்படும். கரும்பில் பயறு வகை பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்க 10 மாவட்டங்களில் 5 ஏக்கரில் 400 செயல் விளக்கத் திடல்கள் ரூ.72 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
டிராகன் பழ உற்பத்தியை அதிகரிக்க கிருஷ்ணகிரி, ஜீனூர் அரசுத் தோட்டக்கலை பண்ணையில் செயல் விளக்கத்திடல் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்படும். ஈரோடு மாவட்டம் தாளவாடி, சத்தியமங்கலத்தில் உருளைக்கிழங்கு சாகுபடியை ஊக்குவிக்க, விவசாயிகளுக்கு விதை, இடு பொருட்களுக்கு மானியம் வழங்க ரூ.20 லட்சம் ஒதுக்கப்படும்.
தமிழகத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உண்ணக்கூடிய வெள்ளை மொட்டுக் காளான், பால்காளான், சிப்பிக் காளான் வளர்ப்பு வேளாண் செயல்பாடாக அறிவிக்கப்படும். வேளாண் விளைபொருள் ஏற்றுமதிக்கான வழிமுறைகளை விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில்தமிழகத்தில் அனைத்து மாவட்டங் களிலும் ஏற்றுமதி ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும்.
தமிழகத்தில் காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து, அமைக்கப்பட்ட சிறப்புக்குழு பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு 39 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT