Published : 03 May 2018 07:35 AM
Last Updated : 03 May 2018 07:35 AM

சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு இல்லை

சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட 5 ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர் வில் இருந்து விலக்கு இல்லை என மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் யசோ நாயக் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி கழகத்தின் புதிய ஆராய்ச்சி கட்டிட தொடக்க விழா நேற்று நடந்தது. மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஸ்ரீபாத் யசோ நாயக், ஆராய்ச்சி கழகத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் செந்தில்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் கூறியதாவது:

இந்திய மருத்துவத்தை உலக அளவில் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி போன்ற ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழகம் மட்டும்தான் கேட்டது. மற்ற எந்த மாநிலமும் விலக்கு கேட்கவில்லை. அதனால், ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படாது.

சித்த மருத்துவத்துக்கு என தனியாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்குமாறு பரிந்துரை வந்துள்ளது. டெல்லியில் ஆயுர்வேதா மருத்துவத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் உள்ளது. அதன்பின்னர் சித்தாவுக்கு எய்ம்ஸ் அமைப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்காக தேசிய ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x