

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும் சரிந்தும் காணப்படும். இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியும், காவிரி ஆறு நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததாலும், கர்நாடகாவில் இருந்து மாதாந்திர நீர் பங்கீடு வழங்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து காவரி கரையோர மாவட்டங்கள், குடிநீர் நீரேற்று நிலையம் மூலம் இதர மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காக, கடந்த மே 17-ம் தேதி விநாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 2,100 கன அடியாக தண்ணீர் அதிகரித்து திறக்கப்பட்டு வந்தது. பின்னர், கடந்த ஜூன் 11-ம் தேதி காலை 6 மணி முதல் குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கன அடியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, அணையில் இருந்து 1,500 கன அடி நீர் திறப்பாலும், அணைக்கு நீர்வரத்து தொடர் சரிவால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேலும், தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வெயில் தாக்கம் குறைந்து, குடிநீர் தேவையும் சற்று குறைந்துள்ளது. எனவே, மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு, இன்று காலை 6 மணி முதல் 1,500 கன அடியில் இருந்து 1,000 கனஅடியாக குறைக்கப் பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 41.17 அடியாக இருந்த நிலையில் இன்று 40.93 அடியாகவும், நீர் இருப்பு 12.70 டிஎம்சியில் இருந்து 12.57 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது.
அணைக்கு நேற்று விநாடிக்கு நீர்வரத்து 138 கன அடியாக இருந்த நிலையில், இன்று 140 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவை விட, அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக சரியத் தொடங்கியுள்ளது.