Published : 23 Jun 2024 09:22 AM
Last Updated : 23 Jun 2024 09:22 AM
சென்னை: பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று பேரவையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசியதாவது:
பால்வளம் என்பது அனைத்து வளத்துக்குமான குறியீடாக உள்ளது. பால்வளத் துறை விவசாயிகளுக்கு பால்வார்க்கும் துறையாக செயல்பட்டு வருகிறது. தற்போது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றுக்கு 34 லட்சத்து 17,375 லிட்டராக உயர்ந்துள்ளது.
அரசு சார்பில் இதுவரை 25,332 மாடுகள் வாங்க ரூ.137 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கையால் செயல்படாமல் இருந்த 217 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் புத்துயிர் பெற்றுள்ளன. இத்திட்டங்கள் மூலம் பால் உற்பத்தி தமிழகத்தில் மேலும் பெருகும்.
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தங்கள் பரிந்துரையை வழங்கியுள்ளது. அதை அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் சம்பள உயர்வு வழங்கப்படும்.
தற்போது ஆவின் 48 லட்சம் லிட்டர் பாலை கையாளும் திறன்கொண்டுள்ளது. இதை 66 லட்சம்லிட்டராக உயர்த்த கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் துறை தொடர்பான 18 அறிவிப்புகளை வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT