Published : 15 May 2018 03:32 PM
Last Updated : 15 May 2018 03:32 PM

வரச்சொல்லு பழனிசாமியை: திருப்பதியில் முதல்வர் எடப்பாடி முன் ஆவேசமாக சாமி ஆடிய பக்தரால் பரபரப்பு

 திருப்பதியில் சாமி கும்பிடச்சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிரில் சாமி ஆடிய பக்தரால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு போலீஸார் அவரை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தாருடன் சேலத்திலிருந்து திருப்பதி திருமலைக்கு சாமி கும்பிட வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். அதிகாலையில் வராக சுவாமி, ஹயக்ரீவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

வராக சாமி கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு லட்சுமி நரசிம்மன் கோயிலில் தனது குடும்பத்தாருடன் எடப்பாடி பழனிசாமி சாமி கும்பிட்டார். அப்போது அவருக்கு சன்னிதானம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது. முதல்வர் அருகில் அவரது மனைவி, மகள் உள்ளிட்டோர் சாமி கும்பிட்டனர். சில பக்தர்களும், பாதுகாவலர்களும் உடனிருந்தனர்.

அப்போது புரோகிதர் போல் இருந்த பக்தர் ஒருவர் திடீரென ஆவேசமாக பயங்கரமாக கூச்சலிட்டார். இதைப் பார்த்தவுடன் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாமி வந்து உடலெல்லாம் பதற ஆட்டம் போட்ட அந்த பக்தரை எடப்பாடி பழனிசாமியும், அவரது மனைவியும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். உடனடியாக செயல்பட்ட பாதுகாவலர்கள் அந்த பக்தரை சூழ்ந்துகொண்டு ஆசுவாசப்படுத்தினர்.

அப்போது சாமி வந்து உடலெல்லாம் பதற ஆடிய அந்த பக்தர் திமிறினார். 'நான் சாமி வந்திருக்கேன்டா, எடப்பாடியை என்னை வந்து பார்த்து விட்டு போகச்சொல்லுடா' என்று கோஷமிட்டார். அப்போது எடப்பாடி இதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

உடனடியாக அவரைப் பாதுகாப்புடன் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் ஏழுமலையான் கோயிலில் வழிபாடு நடத்திய அவருக்கு, தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கோயிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தேங்காய் உடைத்து வழிபட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி சென்னை புறப்பட்டார்.

கோயிலில் சாமியாடிய பக்தர் ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த ஸ்ரீராம சாமி என்பது தெரியவந்தது. அவர் வழக்கமாக வரும் பக்தர்தான் அவருக்கு வேறு எந்த நோக்கம் இல்லை என்று தெரிந்தவுடன் போலீஸார் அவரை விடுவித்தனர். பின்னர் வெளியே வந்த அவரை அங்கு வந்திருந்த பக்தர்கள் பாராட்டிக் கைகொடுத்தனர்.

அப்போது தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்த பக்தர், 'பகவான் என்னை அழைக்கும் போதெல்லாம் நான் வருவேன். தமிழ்நாடே சீரழிஞ்சு போய் கிடக்கு, அவர் குழப்பத்தில் இருக்கிறார். அவர் இங்கு பக்தராக வந்ததால் அவரை அழைத்து அவருக்கு அருள்பாலித்துள்ளார். அவன் யாரு என்னன்னு கேட்டான், அவன் ஒரு மாயையில் இருக்கிறான்' என்று ஸ்ரீராமுலு பேட்டி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x