

கள்ளக்குறிச்சி: கள்ளச் சாராய உயிரிழப்புகளை தடுக்க கடந்த ஆண்டே முதல்வர் பிறப்பித்த உத்தரவுகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பின்பற்றப்படாத நிலையுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த சாராய உயிரிழப்புகளை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பலவித உத்தரவுகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக, கள்ளச் சாராயம் விற்றால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும். 10581 என்ற கட்டணமில்லா எண்ணில் மக்கள் புகார் அளிக்கலாம்.
மாவட்ட மதுவிலக்கு அலுவலகம், டிஎஸ்பிக்கள் அவர்களின் வாட்ஸ்ஆப் எண்களை அறிவிக்க வேண்டும். புகார் மீதான நடவடிக்கை குறித்து மதுவிலக்கு அமலாக்கத் துறை கூடுதல் டிஜிபி கண்காணிக்க வேண்டும். இந்த நடவடிக்கை குறித்த வார அறிக்கையை, ஒவ்வொரு திங்கள்கிழமையும், உள்துறை செயலர் வழியாக முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். ஆட்சியர் தலைமையில் வாராந்திர கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
முதல்வரின் எந்த உத்தரவும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை பின்பற்றவில்லை. எதுவுமே பின்பற்றாததால் கள்ளச்சாராய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த முறை பிறப்பித்த உத்தரவை இனியாவது மாவட்ட நிர்வாகங்கள் கடைபிடிக்குமா, இதனை தமிழக அரசு கண்காணிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.