

மதுரை: “நீதித்துறை அடுத்த 10 ஆண்டுகள் எப்படி இருக்கும் என யோசித்து வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும். டெல்லியில் வணிகம், பொருளாதாரம் சார்ந்த வழக்குகள் அதிகமாக வருகிறது. ஆகவே, இத்துறைகளில் வழக்கறிஞர்கள் நிபுணத்துவம் பெற வேண்டும்,” என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 20-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மகா (எம்ஏஎச்ஏஏ) சங்கத்தின் வெள்ளிவிழா சங்கத் தலைவர் வி.ராமகிருஷ்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்க ஆலோசனைக் குழு தலைவர் கே.பி.தியாகராஜன், செயலாளர் வி.எஸ்.கார்த்தி ஆகியோர் வரவேற்றனர். விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:“தமிழும், நீதியும் ஒன்று. நீதி இல்லாமல் தமிழில் எந்த படைப்பும் இல்லை. மதுரைக்கும் சென்னைக்கும் வித்தியாசம் உண்டு.
மதுரை நீதி வாழ்ந்த இடம். வழக்கறிஞர் தொழிலில் தர்மம் இருக்க வேண்டும். அதே நேரத்தில் தர்மமே தொழிலாக இருக்கக்கூடாது. வழக்கறிஞர் தொழிலை மன திருப்தியோடு மேற்கொள்ள வேண்டும். உயர் நீதிமன்ற கிளை 20 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு திறமையான வழக்கறிஞர்கள் உள்ளனர். பல சிக்கலான வழக்குகளை கையாண்டு வருகிறது. எனவே, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை என்ற பெயர் மாற்றப்பட வேண்டும். திறமை அடிப்படையில் கிளை என்ற நிலையில் உயர்ந்து மதுரை உயர்நீதிமன்றம் என அழைக்க வேண்டும்.
அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். மதுரை கிளையில் கூடுதல் துறைகளை சேர்க்க வேண்டும். எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும். அந்த அளவுக்கு திறமையான வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற கிளையில் உள்ளனர். வரும் காலங்களில் மதுரை வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக அதிகளவில் தேர்வு செய்யப்படுவர்.நீதித்துறை அடுத்த 10 ஆண்டுகள் எப்படி இருக்கும் என யோசித்து செயல்பட வேண்டும். டெல்லியில் தற்போது வணிகம், பொருளாதாரம் சார்ந்த வழக்குகள் அதிமாக வருகிறது. எனவே, வழக்கறிஞர்கள் இத்துறைகளில் நிபுணத்துவம் பெற வேண்டும்,” என்று அவர் பேசினார்.
உயர் நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசுகையில், “உயர்நீதிமன்ற கிளை தொடங்கி ஜூன் மாதத்துடன் 20 ஆண்டுகள் ஆகிறது. 40 சதவீத வழக்குகளை உயர் நீதிமன்ற கிளை கையாண்டு வருகிறது. உயர் நீதிமன்ற கிளை சிறப்பாக நீதி பரிபாலனம் வழங்கி வருகிறது. உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் நீதிபதியாக தேர்வாக நல்ல எதிர்காலம் உள்ளது. மதுரை வழக்கறிஞர்கள் சிறப்பாக வாதாடி வருகின்றனர். இந்திய நீதிமன்றங்களில் அதிக வழக்குகளை முடித்த நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றமும், அதன் மதுரை கிளையும் உள்ளது. இது பெருமைப்படும் விஷயமாகும்” என்றார்.
தொடர்ந்து உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் நாகமுத்து, பி.என்.பிரகாஷ் ஆகியோர் பேசினர். நீதிபதிகள் விஜயகுமார், சவுந்தர், ராமகிருஷ்ணன், அருள்முருகன், விக்டோரியாகவுரி, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், சங்க பொருளாளர் என்.எஸ்.கார்த்திக் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். மதுரை சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியனும் 50 ஆண்டுகள் வழக்கறிஞர் தொழில் செய்து வரும் வழக்கறிஞர்களும் இந்த நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர். துணை சொலிசிட்டர் ஜெனரல் கே.கோவிந்தராஜன் நன்றி கூறினார்.