மணல் குவாரிகளை மீண்டும் இயக்க வேண்டும்: முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் கடிதம்

மணல்குவாரி
மணல்குவாரி
Updated on
1 min read

சென்னை: நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை மீண்டும் இயக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் ஆர்.முனிரத்தினம் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வரும் நிலையில், லாரி உரிமையாளர்களின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கிறது. அதன்படி, தமிழகத்தில் டீசல், பெட்ரோல் மீது விற்பனை வரியை குறைக்க வேண்டும்.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும். தமிழகத்தில் காலாவதியான 26 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். சென்னைக்கு அருகே உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் நீக்க வேண்டும். ஏனெனில், 10 வீல் டிப்பர் லாரிக்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சமும், 12 வீல் டிப்பர் லாரிக்கு ரூ.10 லட்சமும் செலுத்த வேண்டியுள்ளது.

இத்தகைய அதீத சுங்கவரியால் சென்னை சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து எம்சாண்ட் போன்றவற்றை எடுத்து வரும் எங்களின் தொழில் அழிந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட சாலை வரியைக் குறைக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் மத்திய, மாநில அரசுகளின் கட்டுமானப் பணிகளுக்கு போதிய மணல் கிடைக்காததால், அங்கு எம்சாண்ட் பயன்படுத்துகின்றனர்.

இதனால் கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் இருக்கிறது. எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 90 மணல் குவாரிகளை மீண்டும் இயக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in