

சென்னை: கடந்த 2023-24-ம் ஆண்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் ரூ.45,886 கோடி தமிழக அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான வகைகள், அயல்நாட்டு மதுபான வகைகளை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் தற்போதுள்ள நிலவரப்படி 4,829 சில்லறை மதுபான விற்பனைக் கடைகள், 2,919 பார்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் தற்போது 23,986 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், டாஸ்மாக் மூலம்தமிழக அரசு பெறும் வருவாய்தொடர்பான தகவல்கள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2003-04-ம் ஆண்டு ரூ.3,639.93 கோடியாக இருந்த டாஸ்மாக் வருவாய், 20 ஆண்டுகளில் அதாவது 2023-24ல் ரூ.45,885.67 கோடியாக அதாவது 12 மடங்குக்கும் மேல் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு ரூ.1,734.54 கோடி வருவாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.