

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தீவிரமாக பணியாற்றி வந்த எஸ்.பி. மோகன்ராஜ், பணி ஓய்வுக்கு 8 மாதங்கள் இருக்கும்போதே விருப்ப ஓய்வு கேட்டு கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அரசியல் அழுத்தம்காரணமாகத்தான் அவர் விருப்ப ஓய்வு பெறுவதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது. கள்ளச்சாராய மரணங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மோகன்ராஜ் வீடியோ வாயிலாக நேற்று இரவு விளக்கம் அளித்து கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற துயர சம்பவத்தை தொடர்புபடுத்தி, சமூக வலைதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான்பணி ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களே இருக்கும் முன்பு அமெரிக்காவில் உள்ள எனது மகள் மற்றும் மருமகளின் பிரசவத்தை கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தின் பேரில் நானும், எனது மனைவியும் அமெரிக்கா சென்றோம். அதற்காகத்தான் நான் விருப்ப ஓய்வு பெற்றேன்.
ஆனால், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த துயரத்தைதொடர்பு படுத்தி, கள்ளச்சாரயத்துக்கு பயந்து பணி ஓய்வு பெற்றதாக விரும்பத்தகாத, உண்மைக்கு புறம்பான பொய் செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். அதில், எந்த உண்மையும் இல்லை. அவ்வாறு பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.