

சென்னை மாநகரம் இன்று தன் 375-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. இதையொட்டி ‘இந்து’ குழுமத்தில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் ‘பிரன்ட்லைன்’ ஆங்கில இதழ் ஒரு சிறப்பிதழை வெளியிட்டுள்ளது.
இந்த இதழில் வெங்கடாத்ரி நாயக்கரிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி ஆகஸ்ட் 22, 1639-ல் கொடையாகப் பெற்ற ஒரு சிறு நிலப்பரப்பு ஒரு மாநகரமாக மாறிய வரலாறு, புனித ஜார்ஜ் கோட்டை அரசியல் அதிகார மையமாக மாறிய நூற்றாண்டுக் கதை, பல்வேறு மொழிகள் பேசும் மக்களின், இனங்களின் சொந்த வீடாகிப் போன சென்னையின் கலாச்சார எதார்த்தம், குடிசைகளும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும், பெர்முடாக்களும் மடிசார்களும், மீன்பாடி வண்டிகளும் மின்மயமான உயரத்தில் ஓடும் ரயில்களும் என முரண்பாடுகளுடன் வாழும் நகரத்தின் தன்மை, மார்கழிக் கச்சேரிகளுக்கு அப்பால் உயிர்த்துடிப்புடன் வாழும் கானா பாடல்கள், புதிதாக எழுந்து வரும் இளைஞர்களின் ராக் இசை, நவீன தமிழ் இலக்கியத்தில் சென்னைக்கான இடம், காலப்போக்கில் வீழ்ந்துவிடாத கட்டிடக் கலையின் உச்சங்கள், தென்னக சினிமாவின் தலைநகராக உருவெடுத்த கதை, கொலைகாரர்கள் இல்லாத கொலைகாரன்பேட்டை முதல் நான்கு கிணறுகளே எஞ்சியிருக்கும் ஏழுகிணறு வரை ஸ்தலப் பெயர்கள் உருவான குட்டிக்கதைகள் என பன்முகத்தன்மை கொண்ட இதழாக வெளிவந்துள்ளது.
ஏறக்குறைய 25 பக்கங்களில் அபூர்வமான கருப்பு வெள்ளை புகைப்படங்கள் பழைய மெட்ராஸை கண்முன் நிறுத்துகின்றன. ஒவ்வொரு கட்டுரைக்கும் முன்னோட்டம்போல அற்புதமான நவீன டிஜிட்டல் ஓவியங்களும் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன.
மொத்தத்தில், 156 பக்கங்களில் மெட்ராஸ் சென்னையாக பரிணமித்த 375 வருட வரலாற்றைத் தரிசிக்க உதவுகிறது இச்சிறப்பிதழ்.