Published : 09 Aug 2014 08:39 AM
Last Updated : 09 Aug 2014 08:39 AM

கள்ளச் சாராயம், போலி மதுவை கட்டுப்படுத்தவே அரசு டாஸ்மாக்: அமைச்சர் நத்தம் விசுவநாதன் விளக்கம்

கள்ளச் சாராயம், போலி மதுவைக் கட்டுப்படுத்துவதற்காகவே மது விற்பனையை தமிழக அரசு தொடர வேண்டியுள்ளது. விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மூலமாக சமூகச் சூழலை மாற்றி அதன் மூலமாக மதுப் பழக்கத்தை குறைக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.

சட்டப்பேரவையில் மது விலக்கு மற்றும் அமலாக்கத்துறை மானியக் கோரிக்கை மீதான விவா தம் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் கள், மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:

பாலபாரதி (மார்க்சிஸ்ட்):

டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. அது நல்லதுதான். எனினும், சாலையில் சிலர் மது குடித்து தன்னிலை மறந்து விழுந்து கிடப்பதைப் பார்க்கிறோம். இதற்கு நான் உட்பட நாம் அனைவரும்தான் பொறுப்பு. சமீபத்தில் நடந்த தேர்தலின்போது, மதுக்கடைகள் தொடர்ந்து 3 நாட்கள் மூடியிருந்தன. அப்போது விபத்துகள் குறைந்ததாகத் தெரிகிறது. எனவே, நமது தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதற்கு ஏதாவது வழி செய்யவேண்டும். மது விற்பனை மூலம் வருவாய் வருவது ஒருவழிப்பாதை. ஆனால், அதற்கு மாற்றாக, மதுப் பழக் கத்தைக் குறைக்க இன்னொரு வழி கண்டறியப்படவேண்டும்.

அமைச்சர் நத்தம் விசுவநாதன்:

மதுவின் தீமை, நம் எல்லோரை யும்விட முதல்வருக்கு நன்றாகத் தெரியும். மது விற்பனை செய்யும் அதே நேரத்தில் சீர்திருத்தங்கள் செய்யவேண்டும் என்பதையும் உணர்ந்திருக்கிறோம். அது மட்டு மின்றி, நாடு முழுவதிலும் குஜராத்தை தவிர எந்த மாநிலத் திலும் மதுவிலக்கு அமலில் இல்லை. குஜராத்திலும்கூட அது 100 சதவீதம் வெற்றி பெற வில்லை. புலி வாலைப் பிடித்த கதையாகிவிட்டது. அங்கு கள்ளச் சாராய விற்பனை அதிகரித்துள் ளது.

தமிழகத்தில் மது விற்பனையை நாம் விரும்பி ஏற்கவில்லை. கள்ளச் சாராயம், போலி மது வகைகளை ஒழிக்கவே மது விற்பனையைத் தொடரவேண்டியுள்ளது. மது விற்பனையை அரசு செய்து வருவதால், தமிழகத்தில் கள்ளச் சாராய சாவுகள் முழுவதுமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தீமையிலும் இது ஒரு நன்மை யாகும். நாம் மது விற்பனையை நிறுத்தினால் கள்ளச் சாராய விற்பனை தொடங்கிவிடும், அண்டை மாநிலங்களில் இருந்து போலி மது நுழையும்.

எனவே, தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்த வேண்டு மென்றால், குறைந்தபட்சம் அண்டை மாநிலங்களாவது மதுவிலக்கை அமல்படுத்தி யிருந்தால் பரிசீலிக்கலாம். மது விற்பனையை முழுவதுமாகத் தடுக்க ஏதுவான சமூகச் சூழல் ஏற்படவேண்டும். அதற்கான சட்ட அமைப்புகளும் நம்மிடம் இப்போது இல்லை.

இவ்வாறு அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.

நஞ்சப்பன் (இந்திய கம்யூ.):

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை காரணமாக 15 முதல் 24 வயது உடையவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்கள்.

அமைச்சர் விசுவநாதன்:

மதுவுக்கு எதிராக இன்று நேற்றல்ல. 2 ஆயிரம் ஆண்டு களாகப் பேசிவருகிறோம். மதுவிலக்கு பற்றி வள்ளுவர்கூட குறள் எழுதியுள்ளார். விழிப்புணர் வுப் பிரச்சாரத்தை நாம் அனை வரும் சிறப்பாக மேற்கொண்டு சமூகச் சூழலை மாற்றி இப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தமிழகத்தில் மது விற்பனையை நாம் விரும்பி ஏற்கவில்லை. கள்ளச் சாராயம், போலி மது வகைகளை ஒழிக்கவே மது விற்பனையைத் தொடரவேண்டியுள்ளது. மது விற்பனையை அரசு செய்து வருவதால், தமிழகத்தில் கள்ளச் சாராய சாவுகள் முழுவதுமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x