

கோவை: “மன நோய்க்கு ஆரம்பப் புள்ளியாக மொபைல் போன் பயன்பாடு மாறியுள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சமூக வலைதளங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன” என பாஜக தலைவர் அண்ணாமலை கவலை தெரிவித்தார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலை முன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “யோகாவை வாழ்வியல் முறையாக மக்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் யோகாவை இந்தியர்கள் எடுத்துச் செல்கின்றனர். சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தினால் எச்சரிக்க வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மன நோய்களுக்கு ஆரம்பப் புள்ளியாக மொபைல் போன் பயன்பாடு மாறியுள்ளது.
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சமூக வலைதளங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. பள்ளி கல்வித் துறையில் யோகாவை கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் யோகா கட்டாய பாடமாக்கப்பட வேண்டும். காவல் துறையில் நான் பணியாற்றியபோது மன அழுத்தம் அதிகம் இருந்தது. அதை எதிர்கொள்ள கோவை ஈஷாவில் மேற்கொண்ட யோக பயிற்சி பயனளித்தது.
கள்ளக்குறிச்சி சம்பவங்களால் மனஅழுத்தம் அதிகம் ஏற்பட்டுள்ளது. சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதியுதவி வழங்கியுள்ளோம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை. அதற்குப் பதிலாக கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்.
தமிழகத்தில் முதல்கட்டமாக ஆயிரம் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும். அதைத் தொடர்ந்து படிப்படியாக மேலும் பல மதுக் கடைகளை மூட வேண்டும். அரசு மதுக் கடைகளை எடுத்து நடத்தக் கூடாது. முதலமைச்சர் கையில் இருக்கும் காவல் துறையில் பிரச்சினை உள்ளது. தமிழகத்தில் இளைஞர்கள் இடையே போதை பழக்கம் அதிகரித்துள்ளது” என்றார்.