கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாத அவலம்: உயிரிழப்பு அதிகரிக்க இதுவும் காரணமா?

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளச் சாராயம் அருந்தியோருக்கான சிகிச்சைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகளும், மருத்துவச் சாதனங்களும் இல்லாத அவலம் நீடிக்கிறது. உயிரிழப்புகள் அதிகரிக்க இதுவும் காரணமாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்னும் பலர் அபாயக் கட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருந்துகளும், மருத்துவ சாதனங்களும் இல்லாத சூழல் நிலவுகிறது. வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்துவிட்டு வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் விசாரித்தபோது, “மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தியவர்களுக்கு அதை முறிக்க மாற்று மருந்து கொடுக்க வேண்டும். மெத்தனால் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தி நச்சுத்தன்மையாக மாறுவதை இந்த மருந்து தடுக்கும். ஆனால், அந்த மருந்து இங்கு இருப்பில் இல்லை.மரக்காணம் சம்பவம் நடந்தபோது, அரசு இந்த மருந்தை வாங்கி கையிருப்பில் வைத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த மருந்து கையிருப்பில் இல்லாததால் சிகிச்சைக்கு வந்தோருக்கு கொடுக்க முடியவில்லை.

தற்போது 50 பேருக்கு மேல் மெத்தனால் சாராயத்தால் இறந்துள்ளனர். சுமார் ரூ.50 லட்சம் செலவழித்து மாற்று மருந்தை வாங்கி வைத்திருந்தால் அதை பயன்படுத்தி இருக்கலாம். இனியாவது அரசு அந்த மருந்தை வாங்கி கொடுப்பது அவசியம்” என்றனர்.

முக்கிய மருத்துவ உபகரணங்களும் இல்லை: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்களும், நெஃப்ராலஜி எனும் சிறப்பு சிறுநீரக மருத்துவரும் இல்லாததால் பலர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர், சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பட்டனர். அதில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயர் அதிகாரியிடம் விசாரித்தபோது, “கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி திறந்து 2 ஆண்டுகளே ஆகிறது. 5 ஆண்டுகள் ஆன பின்னர் தான் ஹீமோ டயாலிஸ் இயந்திரமும், நெஃப்ராலஜிக்கான சிறப்பு சிறுநீரக மருத்துவப் பேராசிரியரும் நியமிக்கப்படுவர். அதனால் தான், தற்போது பாதிக்கப்பட்ட பலர் ஜிப்மர் உள்ளிட்ட வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in