Last Updated : 21 Jun, 2024 09:05 AM

6  

Published : 21 Jun 2024 09:05 AM
Last Updated : 21 Jun 2024 09:05 AM

கள்ளச் சாராய விற்பனை: கடந்த ஆண்டே கவனத்துக்குக் கொண்டுவந்த அதிமுக எம்எல்ஏ - வைரலாகும் கடிதம்

எக்ஸ் சமூகவலைதளத்தில் வைரலான கள்ளகுறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார் சட்டப்பேரவை தலைவருக்கு எழுதிய கடிதம்.

விழுப்புரம்: கள்ளகுறிச்சியில் கள்ளச் சாராய விற்பனை குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க கடந்த ஆண்டே அதிமுக எம்எல்ஏ எம்.செந்தில்குமார் பேரவைத்தலைவருக்கு அளித்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. 168 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்ட டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் அரசு அனுமதி பெற்ற மது குடிப்பகம் எத்தனை உள்ளது என கேட்டபோது கிடைத்த தகவல்கள் பின்வறுமாறு, விழுப்புரம் மாவட்டத்தில் 117 டாஸ்மாக் கடைகளும், கள்ளகுறிச்சி மாவட்டத்தில் 103 டாஸ்மாக் கடைகளும் செயல்பட்டுவருகிறது. 5 இடங்களில் மட்டும் தனியார் பார் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் கள்ளகுறிச்சி நகரத்தில் 2 டாஸ்மாக் பார்கள் உட்பட 34 பார்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 45 டாஸ்மாக் பார்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு அருகாமையில் அதிகபட்சம் 100 மீட்டர் தூரத்தில் அனுமதியில்லாமல் டாஸ்மாக் பார் இயங்கிவருகிறது. இதை டாஸ்மாக் கேண்டீன் என்று அழைக்கிறார்கள். இங்கு புதுச்சேரியில் இருந்து ரூ 50க்கும் குறைவாக வண்ணக்கலவையான சாராய பாட்டில்கள் வாங்கி கடத்திவரப்பட்டு ரூ 150 முதல் ரூ200 வரை டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நேரங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் இயங்காத காலங்களில் விற்கப்பட்டுவருகிறது.

இக்கடைகள் இயங்குவதை காவல்துறையினரிடம் தெரிவித்தால் யார் தகவல் தெரிவிக்கிறார்களோ அவரின் பெயரை போலீஸாரே தெரிவிக்கின்றனர் என்று திண்டிவனம் அதிமுக எம்எல்ஏ அர்ஜூணன் வெளிப்படையாக குற்றம்சாட்டி கண்டன ஆர்பாட்டம் ஒன்றில் பேசினார்.

அண்மையில் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லையில் வீடு ஒன்றில் மது பாட்டில்கள் விற்கப்பட்ட வீடியோ வெளி வந்தவுடன் மதுபாட்டில் விற்கப்பட்டவர் கைது செய்யப்பட்டார். அதேநேரம் இதை வீடியோவாக சமூகவலைதளங்களில் வெளியிட்டவர் மிரட்டப்பட்டார்.

இது அல்லாமல் விழுப்புரம் மாவட்டத்தில் மூலைகடிச்சான் என்றும், கள்ளகுறிச்சியில் பாக்கெட் என்றும் அழைக்கப்படும் கள்ளச் சாராயம் விற்பனையாகிறது. இதில் கள்ளகுறிச்சியில் விற்கப்படும் கள்ளச் சாராயம் கடுக்காய் சாராயம் என்று அதாவது மூலிகை சாராயம் என பெயரிடப்பட்டு விற்கப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்ட போலீஸாரால் கள்ளச் சாராயம் , மதுபாட்டில் விற்றதாக 70 பேர் கைது செய்யப்பட்டு 150 லிட்டர் சாராயம் மற்றும் 850 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

கள்ளச் சாராய விற்பனை குறித்து கள்ளகுறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார் கடந்த 29.3.2023ம் தேதி சட்டப்பேரவைத் தலைவருக்கு அளித்த கடிதத்தில் சட்டப்பேரவையில் விவாதிக்க அளிக்கப்பட்ட கடிதத்தில்,

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 55ன் கீழ் கீழ்காணும் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

கள்ளகுறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம், கூத்தகுடி கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் 25.3.2023ம் தேதி முதல் காணவில்லை என புகார் தெரிவித்திருந்த நிலையில், கூத்தகுடி கிராமத்தைச் சேர்ந்த 3 நபர்களை பிடித்து வந்து விசாரித்து மது அருந்த அழைத்துச் சென்று மது பாட்டில்களால் தலையில் தாக்கி கழுத்தில் குத்தி கூத்தக்குடியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் புதைத்துவிட்டனர்.

எனவே இப்பகுதியில் கஞ்சா மற்றும் கள்ளச் சாராயம் பெருமளவில் புழக்கத்தில் இருப்பதால் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்க என கூறி அவரும், எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் சமுக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதற்கிடையே காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், கள்ளச் சாராய வியாபாரிகளை விடுவிக்க போலீஸாருக்கு திமுக எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் நெருக்குதல் கொடுத்ததாகவும், கள்ளகுறிச்சி எம்பி மலையரசன் வெற்றியை கொண்டாடும் வகையில் அண்மையில் கைது செய்யப்பட்ட கன்னுகுட்டி என்கிற கோவிந்தராஜன் கள்ளகுறிச்சியில் உள்ள திமுக கட்சி அலுவலகம் அருகே வைக்கப்பட்ட பேனர் அவர் கைது செய்யப்பட்டதும் அவசர அவசரமாக அகற்றியுள்ளனர் என்றும் பாமக குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கிடையே கள்ளகுறிச்சி பொறுப்பு அமைச்சர் எவ.வேலு பேசும்போது, கள்ளச் சாராயத்தை விஷ சாராயம் என கூறியும், தவறு செய்தவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக கூறியுள்ளார்.

கள்ளச் சாராயம், விஷ சாராயம்: மதுவை அரசு அனுமதியின்றி, தகுந்த உரிமம் இன்றி காய்ச்சி குடித்தால் அது கள்ளச் சாராயம். அதுவே போதைக்காக மெத்தனால் கலக்கப்படும்போது விஷ சாராயமாகிவிடுகிறது. அனுமதியின்றி மெத்தனால் கலந்துவிற்கப்பட்ட சாராயம் கள்ளச் சாராயமா, விஷ சாராயமா? அரசு விளக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x