

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. 168 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, 19-ம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 17 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இதில் 3 பேர் பெண்கள். உயிரிழந்தவர்களில் 31 பேரின் உடல்கள், நேற்று ஒப்படைக்கப்பட்டன.
இதற்கிடையே, அதே பகுதியில் மேலும் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர்களும் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அந்த வகையில், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மரில் 168 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சிலர் திடீரென கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கடும் வயிற்று வலி இருப்பதாகவும் கூறியதால், பரபரப்பான சூழல் காணப்பட்டது. அவர்களுக்கு மருத்துவர்கள் உடனுக்குடன் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்றும் சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தனர்.
இந்நிலையில், இன்று (ஜூன் 21) காலை நிலவரப்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இதில், 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் விவரம்: பூவரசன் (28), பிரவீன்குமார் (29), செல்வம் (30), ஏ.ரவி (32), மனோஜ்குமார் (33), மணிகண்டன் (35), கண்ணன் (39), முருகன் (40), ஜெகதீசன் (40), சுரேஷ் (40), முருகன் (40), நூர் பாஷா (45), சுரேஷ் (45), ஆனந்தன் (45), கந்தன் (47), ராமு (50), ஆனந்தன் (50), கோபால் (52), சேகர் (57), ஜெகதீஸ்வரன் (58), விஜயன் (58), பி.சுப்பிரமணி (58), தனகோடி (60), ரவி (60), ஜி.சுப்பிரமணி (60), கிருஷ்ணமூர்த்தி (61), அய்யாவு (65), ஆறுமுகம் (65), ராமகிருஷ்ணன் (65), நாராயணசாமி (65), சின்னப்பிள்ளை (65), ராஜேந்திரன் (65), கணேசன் (70), அன்வர் பாஷா (70), முத்துசாமி (75). உயிரிழந்த பெண்கள்: வடிவுக்கரசி (32), இந்திரா (48), லெட்சுமி (50).
கள்ளச் சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் தகவல் வெளியான நிலையில், கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார். சின்னத்துரை என்பவர், மெத்தனால் கலந்த சாராயத்தை தன்னிடம் விற்றதாக போலீஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கோவிந்தராஜின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரனிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். அவரிடம் கள்ளச் சாராயம் வாங்கிச் சென்று விற்றது தொடர்பாக 23 பேரை விசாரித்து வருகின்றனர். சின்னத் துரையையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஒரே பகுதியில் 26 பேரின் உயிரை பறித்த சாராயம்: கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் மட்டும் 26 பேர் உயிரிழந்ததால் அந்தப் பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. உறவுகளை பறிகொடுத்தவர்கள் ஆங்காங்கே அழுதபடி இருந்தனர். இந்த பகுதியில் 6 தெருக்கள் உள்ளன. ஒரு தெருவுக்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறுகலான தெருக்களில் இடநெருக்கடி காரணமாக, பொதுவாக ஒரே பந்தல் அமைத்து 4 குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்தனர். பின்னர், வாகனங்களில் உடல்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இதில் ஊர் மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே, கடும் மழை பெய்ததால், கடும் சிரமத்துக்கிடையே இறுதி சடங்குகள் நடைபெற்றன. 5 மணிக்கு நடைபெற வேண்டிய இறுதிச் சடங்குகள் மழையால் சற்று தாமதமாகி 7 மணி அளவில் நடைபெற்றது. கருணாபுரத்தில் உள்ள மயானத்தில் 21 பேரின் உடல்கள் நேற்று மாலை 7 மணி அளவில் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது.
5 பேர் கிறிஸ்தவர்கள் என்பதால், அவர்களது மத வழக்கப்படி அதே இடுகாட்டில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இறுதி அஞ்சலிக்காக கருணாபுரம் இடுகாட்டில் மொத்த கிராமமே திரண்டிருந்தது.
தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முன்னதாக, “கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ரூ.50,000-ம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.
இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மகேஷ்குமார் அகர்வால் மாற்றம்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயஉயிரிழப்பு விவகாரம் எதிரொலியாக கள்ளச் சாராய உற்பத்தி, விற்பனை மற்றும் போதைப் பொருட்களை தடுக்கும் - கண்காணிக்கும் பிரிவான குற்றம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பொறுப்பை தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் கூடுதலாக கவனிப்பார்.
இதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையர் ஜி.கோபி, சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பியாக இருந்த எஸ்.ஆர்.செந்தில்குமாருக்கு பதில் நியமிக்கப்பட்டுள்ளார். மகேஷ்குமார் அகர்வால் மற்றும் செந்தில்குமார் இருவரும் டிஜிபி அலுவலகத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை செயலர் பி.அமுதா நேற்று பிறப்பித்தார்.
ஏற்கெனவே இவ்விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். மாவட்ட எஸ்.பி.பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.