

சென்னை: மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக கேரள உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எஸ்.மணிகுமாரை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாநில முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், சட்டப்பேரவை தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவால் தேர்வு செய்யப்பட்டு, அக்குழு பரிந்துரைப்பவரை ஆளுநர் நியமனம் செய்வார்.
அந்த வகையில், கடந்த 2020-ம்ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய அதிமுக அரசால் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் கடந்தாண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக கேரள மாநில முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.மணிகுமாரை நியமிக்க ஆளுநருக்கு பரிந்துரைத்தது.
இதை ஏற்ற ஆளுநர் ரவி,எஸ்.மணிகுமாரை நியமித்துநேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகள் அல்லது70 வயது நிறைவு என இதில்எது முன்னதாக வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்.