

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்தநிலையில், இறந்தவர்களுக்கு நேற்று சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சு.முத்துசாமி, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் மற்றும் தலைமைச்செயலர், உள்துறை செயலர், டிஜிபி, உளவுத் துறை ஐஜி உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
இதில், காணொலி வாயிலாக கள்ளக்குறிச்சி ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும்வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் தெரிவிக்க பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, தற்போது மீண்டும் அவர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சென்றுள்ளார். விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய 4 பேர்இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு, விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக,அமைச்சர்கள், தலைமைச்செயலர், காவல்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவின்படி, சில நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, விஷச்சாராய உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட மெத்தனால் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதற்கான மூலகாரணத்தையும் காவல்துறையினர் கண்டுபிடிக்க அறிவுறுத்தியுள்ளேன்.சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம்மற்றும் விழுப்புரம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உடல்நிலையைதொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன்.
2 நாட்களில் அறிக்கை: உள்துறை செயலர் மற்றும்டிஜிபி ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு உடனடியாகச் சென்று சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு 2 நாட்களில் அறிக்கை வழங்குவார்கள்.
இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.