Last Updated : 21 Jun, 2024 07:39 AM

28  

Published : 21 Jun 2024 07:39 AM
Last Updated : 21 Jun 2024 07:39 AM

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பொங்கி எழுந்தவர்கள் கள்ளக்குறிச்சி மரணங்களுக்கு மவுனம் காக்கிறார்களா?

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொங்கி எழுந்த திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்களும் கள்ளக்குறிச்சி மரணங்களுக்கு மவுனம் காக்கிறார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும்மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் ஆளும் கட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் இத்தனை உயிர்கள் பறி போகியிருக்கும் நிலையில், இந்த சம்பவத்துக்கு திரை பிரபலங்கள்,சமூக ஆர்வலர்கள் யாரும் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், ‘ஆளும் கட்சியின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம்’ எனகூறி திமுகவை கடுமையாக சாடி உள்ளார். அதைத்தொடர்ந்து, நடிகர் விஷால், இயக்குநர் பா.ரஞ்சித், இசைஅமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் குரல் எழுப்பி உள்ளனர். இவர்களைத் தவிர மற்ற திரைபிரபலங்கள் யாருமே இந்த விஷயத்தை பற்றி பேசவில்லை.

கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது 13 பேர் உயிரிழந்தனர். அப்போது, ஆட்சியில் இருந்தஅதிமுக அரசை அரசியல் தலைவர்களையும் தாண்டி, திரையுலகினர், சமூகஆர்வலர்கள் என ஒருவர் விடாமல், அந்த சம்பவத்துக்கு எதிராகக் குரல்கொடுத்தனர். நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த் ஆகியோர் தூத்துக்குடி சென்று, பாதிக்கப்பட்டவர் களைச் சந்தித்தனர்.

அவ்வப்போது அரசியல் பேசும் நடிகர் சத்யராஜ், ‘எங்கோ வாழும் முதலாளிகள் முக்கியமா? அல்லது இங்குவாழும் நம் உறவுகளும், சொந்தங்களும், தமிழ்நாட்டு மக்களும் முக்கியமா? இந்த சம்பவம் நெஞ்சை பதைக்கிறது,’ என வீடியோ வெளியிட்டு அதிமுகவுக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.

இதேபோல், நடிகர்கள் சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, தனுஷ், பார்த்திபன், விவேக், அரவிந்த்சாமி, சிபிசத்யராஜ், ஜெயம் ரவி, சாந்தனு பாக்யராஜ், நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், அதுல்யா ரவி, இயக்குநர்கள் சங்கர், சீனு ராமசாமி, சிம்புதேவன், கார்த்திக் சுப்புராஜ், பா.ரஞ்சித், பாடலாசியர் விவேக் என திரையுலகினர், சமூகஆர்வலர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் என பலரும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு தங்களது கடுமையான கண்டன குரல்களை எழுப்பி, அப்போதையை அதிமுக அரசையே திக்குமுக்காட வைத்தனர். பாடகர் கோவன் போராட்டங்கள் மூலம் அப்போதைய அரசை கடுமையாக சாடினார்.

ஆனால், தற்போது, திமுக ஆட்சியில் விழுப்புரம், செங்கல்பட்டு தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகளவில் நிகழ்ந்துள்ளன. ஆனால், அதுகுறித்து ஏன்பெரிதாக பேசப்படாமல் இருக்கிறது? தூத்துக்குடி சம்பவத்துக்கு பொங்கிஎழுந்தவர்கள் இப்போது எங்கேபோனார்கள். அவர்களின் அரசியல் பேசும் அறம் என்பது அவ்வளவு தானா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த சம்பவத்துக்காக திமுகவின் கூட்டணி கட்சியினர், கடுமையான கண்டனங்கள் எதுவும் தெரிவிக்காமல், அறிவுரை வழங்குவது போல மேம்போக்காக அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும், கள்ளச்சாராய மரணங்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், தவறு செய்தவர்களுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும், கள்ளச்சாராய விற்பனையை தடுத்து இதுபோன்ற மரணங்கள் இனி எப்போதும் நிகழாமல் பார்த்துக் கொள்வது அனைவரின் கடமையும் கூட என பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வரு கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x