Published : 22 May 2018 04:09 PM
Last Updated : 22 May 2018 04:09 PM

துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் பலி; சட்டம் ஒழுங்கை காக்காத அரசு கலைக்கப்பட வேண்டும்: விஜயகாந்த்

போராட்டத்தை கையாளத் தெரியாமல் கலவரமாக மாற்றி துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சட்டம் ஒழுங்கை காக்கத்தெரியாத இந்த அரசு கலைக்கப்பட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 100 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்களின் உணர்வுகளை கண்டுகொள்ளாமல் இருந்த மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும், தமிழக அரசும், மத்திய அரசும் பொதுமக்களின் போராட்டத்தை உதாசினப்படுத்தினர்.

அதன் விளைவு இன்று 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தும், தங்களுடைய எதிர்ப்பைக் காட்டும் விதத்தில், அமைதியான முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றபோது, ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசின் காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியதின் விளைவு, அமைதியான போராட்டம் கலவரமாக மாறி துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது.

பொதுமக்களுக்கு பாதிப்பு என்று தெரிந்தும் அந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசும், மத்திய அரசும் செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். மக்களின் உயிரும், உடமைகளும் தான் முக்கியமே தவிர, மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டமும் வெற்றிபெற்றதாக இல்லை, எனவே மக்கள் விரும்பாத அந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக ஆளும் அதிமுக அரசும், மத்திய அரசும் தடைவிதித்து நிரந்தரமாக மூடவேண்டும்.

துப்பாக்கிச் சூடு கலவரத்தில் ஈடுபட்டு காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்துகொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதைத் தவிர்க்காமல் தமிழக அரசு தான்தோன்றித்தனமாக செயல்படுவதும், காலம் தாழ்த்துவதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே ஆளும் அதிமுக அரசும், மத்திய அரசும் இதில் முழுக்கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய ஆளும் அதிமுக அரசு கலைக்கப்பட வேண்டிய அரசு என்று தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.’’

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x