அமைச்சர்களுக்கு எதிரான சொ.கு வழக்கு மறு ஆய்வு மனுக்களின் மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

அமைச்சர்களுக்கு எதிரான சொ.கு வழக்கு மறு ஆய்வு மனுக்களின் மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பில் ஈடுபட்டதாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மேல் விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்த சிவகங்கை நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். கடந்த மார்ச் மாதம் முதல் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை தொடங்கியது.இந்த மூன்று வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்தன. இதையடுத்து இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in