“கள்ளச் சாராய மரணம் அரசே கொலை செய்வதற்கு ஒப்பானது” - வானதி சீனிவாசன் கருத்து

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
Updated on
1 min read

சென்னை: கள்ளக்குறிச்சியில் நேரிட்ட கள்ளச் சாராய மரண சம்பவம் என்பது அரசே கொலை செய்வதற்கு ஒப்பானது என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை நிகழ்ச்சி முடிந்த பிறகு, வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது கடுமையான அதிர்ச்சியை, வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போது படிப்படியாக டாஸ்மாக்கை குறைப்போம் என கூறினார்கள். அரசு மதுவிற்பனையை மட்டுமே நம்பியிருக்கவில்லை. ஆனால் டாஸ்மாக் மூடப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்பதே இதுவரை அரசின் பதிலாக இருந்து வந்தது. தற்போது நிகழ்ந்திருப்பது இரண்டாவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடிய சம்பவமாக இருக்கிறது.

கிட்டத்தட்ட 35-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் இருக்கிறது. பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இவ்வளவு பெரிதாக இத்தனை பேர் பாதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் கள்ளச் சாராய விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால், இன்னும் எந்தெந்த மாவட்டங்களில் இவையெல்லாம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.

திராவிட மாடல் ஆட்சி என்பது தமிழகத்தை போதையில் தள்ளும் மாடலாக இருக்கிறது. ஒரு புறம் கஞ்சா, போதை பொருள்களின் விற்பனையால் சின்னஞ்சிறு சிறுவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் இருக்கிறது. மறுபுறம் டாஸ்மாக் வாயிலாக தமிழகத்தில் அதிகமாக விதவைகளை உருவாக்கும் மாடலாக இந்த அரசு இருந்து கொண்டிருக்கிறது.

இச்சம்பவம் அரசே கொலை செய்வதற்கு ஒப்பானது. அரசின் இயலாமை, அலட்சியத்தையும் மக்களிடையே கொண்டு சேர்ப்போம். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in