

சென்னை: பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் தமிழக கடலோரப் பகுதிகளில் நடைபெறும் ‘சாகர் கவாச்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக மும்பையில் புகுந்துபயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
இதில், காவல் துறையினரே பயங்கரவாதிகள் போன்று தமிழக கடற்பகுதிகளில் நுழைவார்கள். அவர்களை, பாதுகாப்பு படையினர் பல குழுக்களாகப் பிரிந்து தடுத்து, தாக்குதல் நடைபெறுவதை முறியடிப்பார்கள். அந்த வகையில், இந்தாண்டுக்கான ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில்,8 ஆயிரம் போலீஸார் பங்கேற்றுள்ளனர். இது இன்றுடன் நிறைவடகிறது. பாதுகாப்பு ஒத்திகையையொட்டி, சென்னையில் தலைமைச் செயலகம், துறைமுகம்,டிஜிபி அலுவலகம், சென்னைகாவல் ஆணையர் அலுவலகம்உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ராமேசுவரத்தில் நடைபெற்ற ஒத்திகையின்போது பாம்பன் மற்றும் தனுஷ்கோடி கடற்பகுதியில் 2 படகில் 12 பேர் ஊடுருவ முயன்றனர். அப்போது கடலோர காவல்படை போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
தூத்துக்குடியில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் சந்தேகப்படும்படியாக நின்ற இரு படகுகளை போலீஸார் விரைந்து சென்று மடக்கினர். அவற்றில் தீவிரவாதிகள் போல் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 3 போலி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் கடல் பகுதி வரை, சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து குளச்சல் கடல் பகுதி வரைஎன, இரு குழுவாக பாதுகாப்புப் படையினர் அதிநவீன படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், புதுக்கோட்டைமாவட்ட கடலோரப்பகுதிகளிலும் ‘சாகர் கவாச்’ ஒத்திகை நடைபெற்றது. நாகை கடலோர பகுதியில்தீவிரவாதிகள் போல வந்த 12 பேரை போலீஸார் பிடித்தனர்.