Published : 20 Jun 2024 06:05 AM
Last Updated : 20 Jun 2024 06:05 AM
சென்னை: போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்களை நியமிக்க தனியார் நிறுவனங்களிடம் போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிற்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஓட்டுநர், நடத்துநர் ஒப்பந்த நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கடந்த 17-ம் தேதி ஒரு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
‘அரசு போக்குவரத்து கழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் மண்டலங்களில் பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்களை வழங்க தனியார் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து மின்னணுடெண்டர்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தேர்வாகும் நிறுவனம்,போக்குவரத்து கழகத்துக்கு 169ஓட்டுநர்கள், 290 நடத்துநர்களை பணிக்கு அனுப்ப வேண்டும். முதலில் ஓராண்டு ஒப்பந்தம் போடப்பட்டு பின்னர் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனத்தை தனியாரிடம் கொடுக்க கூடாது என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், போக்குவரத்து கழகம் ஒப்பந்த நியமனத்துக்காக டெண்டர் கோரியிருப்பது ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிற்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: புதிய பேருந்துகள் எதையும் கொள்முதல் செய்யாமல், ஓட்டை உடைசலான பேருந்துகளால் ஏற்கெனவே போக்குவரத்து துறையை திமுக அரசு அதலபாதாளத்துக்கு தள்ளி இருக்கிறது. இந்த சூழலில், போக்குவரத்து துறையை தனியார்மயமாக்கும் முயற்சியின் ஒரு படியாகத்தான் தற்போது ஓட்டுநர், நடத்துநர்நியமனத்துக்கு தனியாரிடம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளதோ என்ற சந்தேகம் நிலவுகிறது.
இதற்குகடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இந்த டெண்டரை ரத்துசெய்வதுடன், போக்குவரத்துகழகத்தை தனியார் வசமாக்கும்அனைத்துவிதமான முயற்சியையும் கைவிட வேண்டும். முறையாக பணியமர்த்தி, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, துறையின் கட்டமைப்பை சீர்செய்து மக்களுக்கு பயணசேவையை வழங்குமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஓட்டுநர், நடத்துநர் பயிற்சி பெற்று, அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், தனியார்நிறுவனங்கள் மூலம் பணியிடங்களை நிரப்புவது நியாயமா. இது சமூகநீதிக்கு எதிரான செயல் இல்லையா. திமுக அரசின் தொழிலாளர் விரோத செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். போக்குவரத்து ஊழியர்களை நிரந்தரமான முறையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: ஒப்பந்த முறையில் ஓட்டுநர், நடத்துநர்களை நியமிக்கும்போது சமூக நீதியும், தொழிலாளர் உரிமைகளும் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிடும். உழைப்பு சுரண்டலை ஊக்குவிக்கும் என்று உயர் நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்ட முறையை அரசு பின்பற்றுவது கண்டிக்கத்தக்கது. போக்குவரத்து துறை ஊழியர்களை அனைத்து உரிமைகளுடன் தமிழக அரசே நேரடியாக நியமிக்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:3 ஆண்டுகால ஆட்சிக்கு பிறகும் ஓட்டுநர், நடத்துநர்களை நியமிக்காமல் காலம் தாழ்ந்து, இப்போது ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருப்பது ஏற்புடையது அல்ல. ஊழியர்களை நிரந்தரமாக பணி அமர்த்துவதோடு, பழுதற்ற, தரமான பேருந்துகளை இயக்கி, விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளன ஏஐடியுசி பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம்: தமிழக அரசின் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயின்று, வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணி வழங்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT