Published : 20 Jun 2024 06:37 AM
Last Updated : 20 Jun 2024 06:37 AM
சென்னை: பழனிசாமி மீது நம்பிக்கை இல்லாததால் அதிமுகவினர் நடிகர் விஜய்யை தங்கள் கூட்டணிக்குஅழைக்கின்றனர் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில மையக்குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, பாஜக சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன், கே.பி.ராமலிங்கம், ராம சீனிவாசன் உட்பட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சுமார் 6 மணிநேரம் நடைபெற்றஇந்த கூட்டத்தில், பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிறகு,அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால் நிச்சயம் கடும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும். தமிழகத்தில் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அரசு அதிகாரிகளுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களுக்கு சட்டம் ஒழுங்கின் மீது நம்பிக்கை எவ்வாறு வரும்.
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தனிநபர் அறிக்கையில் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்கள் அதிகம் உள்ளன. அறிக்கையில், ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் பள்ளிகளை அரசு பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், எங்களுக்கு உடன் பாடு கிடையாது. அந்த மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் இன்னும் சில ஆண்டுகள் கொடுக்கப்பட வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் பள்ளிகள் இயங்கும் பகுதியை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஆசிரியரை, அந்த பள்ளியில் பணிநியமனம் செய்ய கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, முற்றிலும் தவறானது.
கயிறு, திருநீறு வைக்க கூடாதுஎன்கிறார்கள். பலர் சிலுவை அணிந்து வருவார்கள், ஹிஜாப் அணிவார்கள். இந்த அறிக்கையால் பள்ளிகளில் பன்முகத் தன்மை பாதிக்கப்படும். பள்ளிகளில் சாதி இருக்க கூடாது என்பது எங்கள் கருத்து. ஆனால்,அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்தினால் சாதி ஆதிக்கம் அதிகரிக்கும்.
அதிமுக முன்னாள் அமைச்சர்செல்லூர் ராஜூ, நடிகர் விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நல்லது என்று தெரிவித்துள்ளார். இது, அவர்கள் தலைவர்பழனிசாமி மீதான நம்பிக்கையை அவர்கள் இழந்ததாக பார்க்கமுடிகிறது. அதிமுக பனிபாறைபோல கண்முன்பே தேய்ந்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை சட்ட ஒழுங்கை காரணம்காட்டி அதிமுக புறக்கணித்திருப்பதாக கூறும் பழனிசாமி, ஈரோடு இடைத்தேர்தலில் மட்டும் ஏன் போட்டியிட்டது. பழனிசாமி சொன்ன கருத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT