மின்சாரம் தாக்கி பலியான காய்கறி வியாபாரி குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் வழங்க தூத்துக்குடி மாநகராட்சிக்கு உத்தரவு
மதுரை: தூத்துக்குடியில் அண்ணா சிலையை சுற்றியுள்ள இரும்பு வேலியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த காய்கறி வியாபாரி குடும்பத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த ஜெ.லிங்கசிவா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'என் கணவர் ஜெயகணேசன் (44). காய்கறி வியாபாரம் செய்து வந்தார். எங்களுக்கு 11 வயது, 8 வயதில் குழந்தைகள் உள்ளனர். கடந்த 25.5.2023ல் தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரத்தை முடித்துவிட்டு செல்லும் போது மார்க்கெட் சிக்னல் அருகேயுள்ள அண்ணா சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு வேலியில் என் கணவரின் கைபட்டதில் அவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
அண்ணா சிலை தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் 2007-ல் நிறுவப்பட்டுள்ளது. சிலையில் மாலை 6.30க்கு தானாக எரிந்து, காலை 6.30க்கு தானாக அணைந்துவிடும் படி போகஸ் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. சிலைக்கான மின் இணைப்பு மாநகராட்சி ஆணையர் பெயரில் உள்ளது. மின் கட்டணம் திமுக சார்பில் செலுத்தப்படுகிறது. மின் கசிவு மூலம் விபத்து ஏற்பட்டால் மின்சாரம் கட்டாகும் வகையில் எம்சிபி ட்ரிப்பர் சுவிட்ச் இல்லை. பெரிய மின் விபத்து நடைபெற்றால் மின்சாரத்தை நிறுத்த மெயின் வசதியும் இல்லை.
எனவே, என் கணவர் உயிரிழப்புக்கு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம், மின்சார வாரியம் மற்றும் மாவட்ட திமுக தான் காரணம். எனவே என் கணவர் இறப்புக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, கருணை வேலை, வீடு வழங்க உத்தரவிட வேண்டும்.'' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆயிரம் கே.செல்வகுமார் வாதிட்டார். பின்னர் நீதிபதி, ''மின்வாரியம் சார்பில் அண்ணா சிலையை மாநகராட்சி நிர்வாகம் தான் பராமரிக்கிறது. இதனால் மின்வாரியத்தின் மீது தவறு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் பெயரில் தான் மின் இணைப்பு உள்ளது. இதனால் நடந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என மாநகராட்சி கைகழுவிட முடியாது. இதனால் மாநகராட்சி தான் மனுதாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
மனுதாரரின் கணவர் 44 வயதில் இறந்துள்ளார். காய்கறி வியபாரம் செய்து வந்துள்ளார். 2 குழந்தைகள் உள்ளனர். இதனால் மனுதாரர் குடும்பத்துக்கு தூத்துக்குடி மாநகராட்சி ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதில் மூன்றில் ஒரு பங்கு தொகையை உடனடியாக மனுதாரரிடம் வழங்க வேண்டும். எஞ்சிய 2 பங்கு தொகையை குழந்தைகள் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். குழந்தைகள் 18 வயது பூர்த்தியடைந்ததும் அப்பணத்தை எடுக்கலாம்'' என உத்தரவிட்டார்.
