Published : 19 Jun 2024 07:24 AM
Last Updated : 19 Jun 2024 07:24 AM

பாலியல் குற்ற வழக்குகளை உடனுக்குடன் பதிவு செய்ய புதிய இணையதளம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை: பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளை காவல்துறை, போக்சோ நீதிமன்றம், மகளிர்நீதிமன்றம் மற்றும் குழந்தைகள் நலன் சிறப்புத்துறை ஆகியவைஉடனுக்குடன் பதிவு செய்யும்வகையில் போக்சோ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் குழந்தைகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்படுவது முதல் நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரை ஒவ்வொரு நடவடிக்கையையும் துறை அலுவலர்கள் கண்காணித்து வழக்குகளை விரைவுபடுத்த முடியும். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டு தொகையை தாமதமின்றி ஆன்லைனில் நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்குக்கு செலுத்தவும் இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த புதிய இணையதளத்தை இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை முகாம் அலுவலகத்தில் நேற்று தொடங்கிவைத்தார். மேலும், தனிநபர் பராமரிப்பு திட்ட செயலி, குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களை ஆய்வு செய்வதற்கான செயலி, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி ஆகியவற்றையும் அமைச்சர் தொடங்கிவைத்தார்.

அமைச்சர் கீதா ஜீவன், செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x